26 Dec 2017

இயல்பு வாழ்க்கையை நிழலாக்கி ஆவணங்களுக்குள் அடக்கியுள்ளது யுத்தம் ஆய்வாளர் மேரி அஜந்தலா சகாயசீலன்

SHARE

இலங்கைப்போர் மக்களின் இயல்பு  வாழ்க்கையை இயலாமலாக்கி  நிழற்பட ஆவணங்களுக்குள் அடக்கியிருப்தாக போரினால் சிதறிப்போன மக்களின் இயல்பு வாழ்க்கையைப்பற்றிய ஆவணங்களைச் சேகரிக்கும் ஆய்வில் ஈடுபட்ட மேரி அஜந்தலா சகாயசீலன் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்று வரும் காண்பியற் கலையினூடாக சமூகப் பிரக்ஞையை வெளிப்டுத்தும் நிகழ்வின்போது செவ்வாய்க்கிழமை 26.12.2017 அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.


இதுபற்றி மேலும் குறிப்பிட்ட காண்பியற் கலை இறுதியாண்டு மாணவியும் துறைசார் பயிற்சி ஆய்வாளருமான அஜந்தலா,
இறுதிப்போரின் போது மிக உக்கிரமான தாக்குதலுக்கு உள்ளான முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய நிலையை சில ஒளிப்படங்களின் ஆவணப்படுத்தல்களாக இக் காட்சிப்படுத்தலுக்குள் கொண்டுவர முடிந்தது.

யுத்தம் நிறைவுற்று சுமார் ஒன்பது வருட காலங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் இற்றைவரைக்கும் போரும் அது தந்த பன்முகப்பட்ட பாதிப்புக்களின் பாதகமான விளைவுகளும் மாறாத வடுக்களாக நிழல்களாக மக்களது இயல்பு வாழ்க்கையின் இடர்களாய்த் தொடர்கின்றன.

மன, உடற் காயங்கள்,  அங்கவீனம், அநாதரவு என்பன பாதிக்கப்பட்ட மக்களை விரக்தியின் பக்கம் இழுத்துச் சென்றிருப்பதோடு வேண்டாத விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆயினும், ஆங்காங்கே ஒரு சில ஒளிக்கீற்றுக்களும் ஒத்தாசையாய் இருந்து விரக்தியை விரட்டியடித்திருக்கின்றன என்பதையும் நோக்க வேண்டும்.
இவை பாதகத்திலும் சாதகத்தை தேட வழி உண்டு என்ற மறுபக்கப் பார்வைக்கு வழிகாட்டியிருக்கிறது.

போரின்போது தனது அங்க அவயவங்களை   இழந்த நிலையிலும் கூட அன்றாட ஜீவனோபாயத்துக்காக உழைக்கின்றவர்களாக சிலர் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பியிருக்கின்றமை நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது.

எவ்வாறாயினும் யுத்தம் ஏற்படுத்தித் தந்த பரிசுகளாக இழப்பு, வெறுப்பு, விரக்தி பாதிப்பிற்குள்ளான மக்களை நிழல்களாக தொடர்கின்றமை மறுக்க முடியாத உண்மைகளாகும்.” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: