பட்டதாரிகள் தாங்கள் கற்ற கல்வி முறையினூடாக தங்களுக்கான பொருத்தமான தொழிலை உருவாக்கிக் கொண்டவர்களாகவும் தொழிலற்ற ஏனையவர்களுக்கு தொழில் வழங்கக் கூடியவர்களாகவும் உருவாக வேண்டும் என என இலங்கை கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்று வந்த காண்பியற் கலையினூடாக சமூகப் பிரக்ஞையை வெளிப்டுத்தும் இறுதி நிகழ்வின்போது அவர் புதன்கிழமை 27.12.2017 இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இதுபற்றி மேலும் குறிப்பிட்ட பணிப்பாளர் கலாநிதி ஜெய்சங்கர்,
நம்மைச் சூழ, கவின்கலை (அழகியற்கலை) சார்ந்து பல்வேறு தொழில் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
ஆனால், சமகாலப் புரிதலில் கலைப் பட்டதாரிகள் எனக் கருதும்போது ஆசிரியத் தொழில் என்று மட்டுமே மனதில் பதியப்பட்டுள்ளது.
உண்மையில் எழில் கலையில் (கவின் கலை) பல்வேறு புத்தாக்கத் துறைகள் உள்ளன.
அதனால், இவற்றை உள்வாங்கி எங்களது கல்விச் செயற்பாடுகளை வடிவமைத்துக் கொண்டு செல்கின்றோம்.
இதனூடாக கலைப் பட்டதாரிகள் தொழில் ரீதியாக தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளக் கூடியவர்களாகவும், உள்ளுர் வளங்களிலிருந்து உச்ச பயனைப் பெற்று நாட்டுக்கும் சமூகத்துக்கும் சிறந்த பயனுடையவர்களாகவும் சிறந்த மனித வளமாகவும் மாற முடியும்.
பட்டதாரிகள் என்போர் ஆளுமையும், ஆற்றலும் ஒருங்கே பெற்றவர்களாகவும் அவர்களது ஒவ்வொரு அசைவும் முன்மாதிரி நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.
படித்ததைப் படிப்பிப்பவர்களாக ஆற்றுகைக் கலைகளில் பட்டம் பெற்றவர்கள் இருக்க முடியாது.
உண்மையில் எதிர்காலத்தில் வேலையில்லாப் பட்டதாரிகள் என்ற கையறு நிலையை இந்த சிந்தனைப் போக்கு மாற்றியமைக்கும்.
இவ்வாறு கற்றல் செயற்பாடுகள் சுருங்கியதன் காரணமாக நாம் பலவற்றை இழந்து விட்டோம்.
தேடலும், ஆக்கபூர்வமும் அழிந்து விட்டன. இதனை மறுசீரமைக்கும் முகமாக நாங்கள் புதிய பாடத் திட்டத்தை மீளுருவாக்கம் செய்து வருகின்றோம்.
அதேநேரம் ஏற்கெனவே இருக்கின்ற பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் கற்ற கல்வியை மாணவர்கள் படைப்புக்களாக உருவாக்குகின்ற வகையில் செற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
இந்தக் கலைகளிலுள்ள விடயங்களை உள்வாங்கி மாணவர்கள் தங்களது ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
ஆய்வு என்பது எழுத்தில் மட்டும் ஆவணங்களாக குறுகி விடுவதல்ல.
கவின் கலைகள் சார்ந்த விடயங்கள் ஆய்வுச் செயற்பாடுகளாகவே முன்னெடுப்பட வேண்டும். அப்பொழுதுதான் அதில் புத்தாக்கம் இருக்கும்.
இந்த நடைமுறைதான் இப்பொழுது உலகெங்கிலும் வலுப்பெற்ற ஒரு போக்காக மாறியிருக்கின்றது. இது எங்கள் மத்தியில் மிக அண்மைக் காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆனாலும் இந்த விடயத்தை முன்னெடுப்பதற்கு நாங்கள் பழைய முறைமையில் ஊறிப்போன பழைய கல்வியாளர்களிடமிருந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஆனாலும், உலகப் போக்கில் பெரிய கவின் கலைக் கல்விக் கலாசாலைகள், துறைசார் நிறுவனங்கள் அனைத்திலும் புதிது புதிதான ஆய்வுகள், கற்கை முறைகள், ஆற்றுகைச் செயற்பாடுகள் தினந்தோறும் கண்டு பிடித்து நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றார்கள்.
இந்த உலகப் போக்கிற்குச் சமாந்தரமாக நாங்களும் எங்களது கல்வியில் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டு சிந்தனை, செயற்பாடுகளில் புத்தாக்கத்தை அடைந்து கொள்ள வேண்டும்.
கவின்கலை ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை வெளிப்படுத்தி சீர்தூக்கிப் பார்ப்பதன்மூலம், இனங்கள், மதங்கள், சமூகங்கள், மொழிகள் என்பனவற்றுக்கிடையிலான பிணைப்புக்களை உருவாக்கி இன, மத, சமூக மேலாதிக்கமற்ற ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும், வளத்தையும் உருவாக்க முடியும்.
அழிவுக்குப் பதிலாக ஆக்கபூர்வத்தை அடைந்து கொள்ளவும் வழியேற்படும்.” என்றார்.
0 Comments:
Post a Comment