25 Dec 2017

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 78 வீதமான ஆசிரியர்கள் வெளியிடத்தினை சேர்ந்தவர்கள்.

SHARE
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்பிப்பவர்களில் 78 வீதமான ஆசிரியர்கள் வெளி இடங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் மற்றவர்களை நம்பியே வலயம் இருக்கின்ற நிலை தற்போது உள்ளது. என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை மக்கள் நல இளைஞர் மன்ற உதவும் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில், கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் இடர்படுகின்ற மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (24) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.
அமைப்பின் தலைவர் வே.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட 150 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இக்கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு, வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களில் 78 வீதமான ஆசிரியர்கள் வெளியிடங்களைச் சார்ந்தவர்களாகவும், 22 வீதமானவர்கள் குறித்த வலயத்திற்குட்பட்டவர்களாவும் காணப்படுகின்றனர். இதனால் ஏனைய பிரதேசத்தினை சேர்ந்தவர்களை நம்பியே எமது வலயம் இருக்க வேண்டிய நிலையிருக்கின்றது. இவற்றினை மாற்றியமைக்க வேண்டும். இதற்காக இப்பிரதேசத்திலே ஆசிரியர்கள் உருவாக வேண்டும். இதற்கு இங்குள்ள மாணவர்கள் சிறப்பாக கற்க வேண்டும். பரீட்சைகளில் சிறந்த தேர்ச்சியை அடையவேண்டும். இதற்கு பெற்றோர்களின் பங்கு அளப்பெரியது. பெற்றோர்களின் அக்கறையீனும், மாணவர்களின் கல்வி பின்நிலைக்கு செல்வதற்கு காரணமாக இருக்கின்றதென்பதை மாணவர்களின் வரவு வீழ்ச்சி எடுத்துக்காட்டுகின்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களின் அறிவுமட்டம், ஏனைய நகர வலயங்களில் உள்ள மாணவர்களின் அறிவுமட்டத்திற்கு ஏற்றாற்போல் காணப்படுகின்றது. ஆனால் மாணவர்களின் வரவுக்குறைவும், பெற்றோர்களின் அக்கறையீனமும், மாணவர்களின் அக்கறையீனமுமே கல்வியில் பின்நிலையில் நிற்பதற்கு காரணமாகவிருக்கின்றன.

சமூக அக்கறையின்றி, செயற்படுகின்ற பல இளைஞர்களின் மத்தியில் கல்விக்காக தமது நேரத்தினையும், பணத்தினையும், உடல் வளத்தினையும் பயன்படுத்தி இளைஞர் அமைப்பு இவ்வாறானதொரு செயற்பாட்டினை முன்னெடுத்திருக்கின்றமை வரவேற்கதக்கதும், பாராட்டத்தக்கதுமாகும். இதுபோன்று ஏனைய அனைத்து இளைஞர்களும் சமூக அக்கறையுடன் செயற்பட்டால், சமூகம் முன்னேற்றமடைவதுடன், சமூக பிரச்சினைகளும் குறைவடையும் என்றார்.

இந்நிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் சி.குணசேகரம், கிராமசேவை உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள், மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.












SHARE

Author: verified_user

0 Comments: