31 Dec 2017

“11 வருடங்களாக சவூதி அரேபியாவில் காணாமல் போயுள்ள மகளைத் தேடி மக்கா சென்று பிரார்திக்கவுள்ளேன். எந்தத் தரப்பும் கைகொடுக்கவில்லை”

SHARE
“கடந்த 11 வருடங்களுக்கு மேலாக வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்ற எனது மகள் திரும்பி வரவே இல்லை. எதுவித தொடர்புகளும் இல்லை. எனது மகளை மீட்டுத் தருமாறு ஜனாதிபதி தொடக்கம் அனைத்துத் தரப்பாரிடமும் கெஞ்சினேன் பயனேதுமில்லாததால் மக்கா சென்று புனித கஃபா ஆலயத்தில் மண்டியிட்டுப் பிரார்த்திக்கவுள்ளேன்” என யுவதியின் தாய் தனது நிர்க்கதியை கண்ணீர் மல்கக் கூறினார்.
ஏறாவூர் காயர் வீதியைச் சேர்ந்த முஹம்மது ஹனீபா பிர்தௌஸியா (வயது 35) என்ற யுவதி கடந்த 2006 ஆம் ஆண்டு நெவெம்பர் மாதம் 02ஆம் திகதி கொழும்பிலுள்ள ஹஸ்னா மேன்பவர் முகவரினூடாக வீட்டுப் பணிப்பெண்ணாகத் தொழில்வாய்ப்புப் பெற்று சவூதி அரேபியா சென்றுள்ளார்.

ஆனால், இன்றுவரை 11 வருடங்களாகியுள்ள போதிலும் தனது மகள் ஒரு முறையேனும் நாடு திரும்பவே இல்லை என்று யுவதியின் தாயான சின்னலெப்பை ஆசியா உம்மா (வயது 74) தெரிவித்தார்.

அதேவேளை தனது மகளிடமிருந்து பணம் கிடைப்பதும் தொடர்பும் கடந்த 6 வருடங்களாக நின்று விட்டதோடு அவர் காணாமல் போயிருப்பதாகவும் தாய் தனது முறைப்பாடுகளால் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நல்லிணக்கப் பிரிவுக்கு 2013 ஜனவரி 16 ஆம் திகதியன்று முறைப்பாடு செய்தபோது “அடுத்த வினாடியிலிருந்தே தமது பணியகம் நடவடிக்கை எடுக்கும்” என்று பத்திரம் ஒன்று தரப்பட்டது. ஆனால் இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டு 5 வருடங்கள் கழிந்து விட்ட போதிலும் தனது மகளின் விடயமாக எதுவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்றும் யுவதியின் தாய் கூறினார்.

தனது மகளின் நிலைமை தொடர்பாகக் கண்டறியுமாறும் தனது மகளை மீட்டுத் தருமாறும் கோரியும் ஜனாதிபதி, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆணைக்குழு பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பிரிவு என்பனவற்றுக்கு அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை எந்தவொரு நம்பிக்கை தரும் தகவலும் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நான் மகளுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் சிறுதொகைப் பணத்தையும் சில நகைகளையும் விற்று அதனைச் செலவுக்காக வைத்துக் கொண்டு எனது மகளை என்னிடம் இறைவன் சேர்ப்பிக்க வேண்டும் என்ற மனச்சாந்தியில் நிர்க்கதியான நான் புனித மக்கமா நகர் சென்று பிரார்த்திக்கவுள்ளேன். என் மரணம் அங்கு சம்பவித்தாலும் அது எனது மகள் சென்ற நாட்டில் இடம்பெற்றால் அது எனக்கு நிம்மதியையும் நிறைவையும் தரும்” என்றார்.






SHARE

Author: verified_user

0 Comments: