28 Nov 2017

நாங்கள் எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண் போட்டுச் செல்கின்றோம்

SHARE
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பயணம், இந்த அரசியலமைப்பு ஆக்கம் என்பன ஒரு புனிதக் கடமை என்று எமது தலைவர் சொல்லுவார். நாங்கள் எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண் போட்டுச் செல்லுகின்றோம், அவர்கள் சிந்திய குருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி என்று மிகவும் சோகத்தோடு பாடிச் சென்ற அந்தக் குரல்கள் அனைவரின் செவிகளிலும் விழ வேண்டும். நாங்கள் எதற்காக இத்தைகய பயணத்தில் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும். வெறுமனே ஒருவரிலே கொண்ட பகைமை காரணமாக விலகி நிற்கக் கூடாது. இது ஊர்கூடித் தேர் இழுக்கின்ற விடயம். 
என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

புதிய அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு தாண்டவன்வெளி பேர்டினட் மண்டபத்தில் சனிக்கிழமை (25) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் அவர் மேலும் பேசுகையில் 

பன்மைத்துவம் கொண்ட நாட்டிற்கு எவ்வாறானதொரு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக தென்னாபிரிக்காவினுடைய அரசியலமைப்புச் சட்டத்தைப் பார்க்கின்றோம். இந்த நாட்டிலே உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்புச் சட்டம் என்பது இதுவரையிலே இந்த நாட்டில் இருந்த சிறுபான்மையினரை தங்களுடைய மொத்த அதிகாரத்தையும் கையாண்டு பல்வேறு விதத்தில் இன்னல்களுக்கு உட்படுத்தி இறுதியிலே 2009 இல் முள்ளிவாய்க்காலில் மிகப் பெரிய அனர்த்தத்தை ஏற்படுத்தியதற்குப் பிறகு ஏற்படுகின்ற ஒரு அரசியலமைப்புச் சட்டம். காலாகாலமாக எதேட்சதிகாரத்தைச் செலுத்தி வந்தவர்களும், அந்த எதேட்சதிகாரத்தினால் பாதிக்கப்பட்டவர்களுமாகிய இரண்டு தரப்பினரும் இணைந்து இந்த அரசியலமைப்பை உருவாக்குகின்றனர்.

மிக வித்தியாசமான மனப்பாங்குள்ள இந்த இரண்டு தரப்பினரிடையேயும் இந்த நாடு எம்முடைய நாடு என்கின்ற மனப்பான்மையோடு, இந்த நாடு முழுமைக்குமாக, இந்த நாட்டின் சுபீட்சத்துக்கான ஒரு அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் இப்போது உணரப்பட்டிருக்கின்றது. இது பண்மைத்துவம் மிக்க நாடு என்பதை இந்த நாட்டினுடைய அரச தலைவர் 2015ஆம் ஆண்டு சுதந்திர தினத்திலே முதன்முறையாக உச்சரித்தார். அதற்கு முன்னைய அரசுத் தலைவர்கள் யாரும் அதனை உச்சரித்தது கிடையாது. அந்தத் தொடக்கத்தோடு கூடிய செயற்பாடுகள் மெல்ல மெல்லவாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.

இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோடு பல தடவைகள் எமது தலைவர்கள் பேசினார்கள். உண்மையில் முள்ளிவாய்க்கால் நிகழ்வோடு தமிழர்கள் மூச்செடுக்க முடியாதவர்களாக ஆகிவிடுவார்கள், இனி அவர்கள் அனாதைகளாகி விடுவார்கள். இது ஒரே நாடு, ஒரே குரல் என்ற வகையில் தான் இந்த நாடு இருக்கப் போகின்றது என்ற நிலைமைக்கு மாறாக இந்த நாட்டிலே வடக்கு கிழக்கிலே இருக்கின்ற குறிப்பாக தமிழ் மக்கள் தங்களுடைய ஆணையை மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் என்ற செய்தியைச் சொன்னதைத் தொடர்ந்தும், உலக நாடுகளினுடைய அழுத்தங்களின் காரணமாகவுமே பேச்சுவார்த்தை என்கின்ற விடயத்திற்கு மஹிந்த வந்தார்.

18 முறை அவருடன் பேச்சுவார்த்தை மேடைக்குச் சென்றார்கள், எதுவும் இடம்பெறவில்லை. பாராளுமன்றத்தில் தெரிவுக் குழு ஒன்றை அமைக்க இருக்கின்றோம் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளட்டும் அதன் பின் பார்க்கலாம் என்றார். இவ்வாறு திரும்பத் திரும்ப ஏமாற்றப்பட்ட நிலையில் தான் 2015 ஆம் ஆண்டு எமது தலைவர் மிக தீர்க்க தரிசனமாகச் சிந்தித்ததன் மூலம் இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் நடைபெற்றிருக்கின்றது. அதனால் தான் இந்த நாட்டில் யாரும் எதிர்பார்க்காத ஒருவர் பொது வேட்பாளராக களமிறங்கப்பட்டார். அவருக்கு நாம் எமது ஆதரவை வழங்கினோம்.

இந்த நாட்டினுடைய இனப்பிரச்சினை, தமிழ் மக்களின் பரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றால் இந்த நாட்டினுடைய பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டும் ஒரே திசையில் சிந்திக்கக் கூடிய அளவிற்கு ஒற்று இணங்க வேண்டும் என்பது எமது தலைவர்களின் கனவு. அது இப்போது செயற்பாட்டிற்கு வந்திருக்கின்றது. இதனை வெறும் நிகழ்வாக மாத்திரம் பார்க்கக் கூடாது. இந்த நிகழ்வு எவ்வாறு ஏற்படுத்தப்பட்டது என்பதைப் பார்க்கின்ற போதுதான் தமிழர்களாகிய நாங்கள் இன்னும் சிறந்த தலைமைத்துவத்தோடு இருக்கின்றோம் என்கின்ற உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

இதனைடிப்படையிலே தான் இந்த அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுகின்ற செயற்பாடும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. இடைக்கால அறிக்கை மற்றும் ஆறு உப குழுக்களினுடைய அறிக்கை. இவற்றை நன்றாகப் படித்துப் பார்க்க வேண்டும்.

நாங்கள் வெறுமனே ஒரு அரசியலமைப்பைப் பெற வேண்டும் என்பதற்காகப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயம் அல்ல. எமது இனத்தை முழுமையாக மிகப் பெரிய ஆகூதியிலே தீத்தவர்கள் நாங்கள். அவ்வாறான வரலாற்றைக் கொண்டிருக்கும் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செயற்பட வேண்டியதே இந்தச் சந்தர்ப்பம், இது வாராது வந்த சந்தர்ப்பம், எமது பிரச்சினைகளை நாங்கள் தீர்ப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பம். இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் ஒவ்வொருவரும் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.

அரசியலமைப்பிலே பல விடயங்கள் இருக்கின்றன. ஆனால் அரசியலமைப்பை ஆகிய பின் அது தொடர்ந்து செல்வதென்பது மிக முக்கியமானது. எமது போராட்டத்தின் மூலமே 13 வது திருத்தச் சட்டத்தின் உருவாக்கப்பட்டது. போராடிக் கொண்டிருந்தவர்கள் நாம் ஆனால் 09 மாகாண சபைகளுக்கும் அதிகாரம் வழங்கப்படுவதற்காக அச்சட்டம் உருவாகியது. தற்போது அதில் ஒரு நண்மை வந்திருக்கின்றது. மாகாண முதலமைச்சர்கள் அனைவரும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்திருக்கின்றார்கள். செயற்பாட்டு ரீதியாக, நடைமுறையில் அதிகாரங்கள் தேவை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.

ஆனால் இதில் ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால் எட்டு மாகாண முதல்வர்களும் சென்று தத்தமது மாகாணங்களுக்கு, மக்களுக்கு அதிகாரம் இருப்பதை விட அதிகமாகக் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறிய போது இதனை மிக முக்கியமாக வலியுறுத்திச் சொல்ல வேண்டியவரான ஒருவர் அங்கு செல்லவில்லை என்பதேயாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பயணம், இந்த அரசியலமைப்பு ஆக்கம் என்பன ஒரு புனிதக் கடமை என்று எமது தலைவர் சொல்லுவார். நாங்கள் எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண் போட்டுச் செல்லுகின்றோம், அவர்கள் சிந்திய குருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி என்று மிகவும் சோகத்தோடு பாடிச் சென்ற அந்தக் குரல்கள் அனைவரின் செவிகளிலும் விழ வேண்டும். நாங்கள் எதற்காக இத்தைகய பயணத்தில் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும். வெறுமனே ஒருவரிலே கொண்ட பகைமை காரணமாக விலகி நிற்கக் கூடாது. இது ஊர்கூடித் தேர் இழுக்கின்ற விடயம் என்று தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: