14 Nov 2017

பாரம்பரிய தமிழர் பிரதிநிதித்துவக் கட்சிகளை பலமிழக்கச் செய்வது மடமைத்தனம். தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர் தம்பிப்போடி வசந்தராஜா

SHARE
தமிழ் சமூக உணர்வாளர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம், மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இரண்டு பாரம்பரிய தமிழ் உணர்வுக் கட்சிகளையும் பலமிழக்கச் செய்வது மடமைத்தனமாகும் என தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர்களில் ஒருவரான தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்தார்.
பொது அமைப்புக்களின் கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டணியை அமைப்பது தொடர்பில் இடம்பெறும் முன்னெடுப்புக்கள் பற்றிக் கேட்டபோது திங்கட்கிழமை 13.11.2017 அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இதுபற்றி மேலும் தெரிவித்த அவர், சமீப சில தினங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்திலும் நான் இக்கருத்தையே வலியுறுத்தியிருந்தேன்.

என்னைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கான விடிவின் அரசியல் அத்திபாரமாக இருந்து வந்த பாரம்பரிய தமிழரசுக் கட்சி அரை நூற்றாண்டைக் கடந்த வரலாற்றைக் கொண்டது. அது தமிழ் உணர்வாளர் அஹிம்சைவாதி எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்டது.

அதேவேளை தமிழர் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமார் 15 வருடங்களைக் கடந்துள்ள பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
இவ்விரு கட்சிகளும் தமிழர் வரலாற்றின் ஒவ்வொரு முக்கிய கட்டத்தையும் சுமந்தவையாகும்.

இந்தப் பாரம்பரிய வரலாற்றுக் கட்சிகளைப் பலமிழக்கச் செய்வது சமகாலத்தில் புத்திசாலித்தனமல்ல.

இக்கட்சிகளில் இருக்கும் அரசியல் தலைமைகள் பொருத்தமற்றதாக அல்லது வேகம், விவேகம், சாணக்கியம் அற்றவையாக இருக்கலாம். அதற்காக கட்சியை பலமிழக்கச் செய்வது பொருத்தமானதல்ல. அப்படிச் செய்தால் அது வரலாற்று முன்னெடுப்புக்களின் அடித்தளத்தை அடியோடு சாய்த்து விடும்.

தமிழ் மக்களிடத்தில் பாரம்பரியக் கட்சிகளுக்கென தனியொரு செல்வாக்கும் உண்டு.
கிழக்கு மக்களை புத்தி ஜீவிகளாகவும், சாதாரண அடிமட்ட மக்களாகவும் இரண்டு வகையாக நான் பார்க்கின்றேன்.

புத்திஜீவிகளைப் பொறுத்தவரையில் தற்போதைய தமிழர் அரசியலில் ஒரு மாற்றம் வேண்டும் என்றே கூடுதலானோர் கருதுகின்றார்கள்.

அதேநேரம் அடி மட்ட மக்கள் இதுபற்றி அவ்வளவாக சிந்தித்ததாகத் தெரியவில்லை.
ஆகவே, இவ்வாறான சூழ் நிலையில் பாரம்பரியக் கட்சிகளை பலமிழக்கச் செய்யும் பிரயத்தனங்கள் தமிழ் சமூகத்துக்கு விடிவைப் பெற்றுத் தராது.” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: