என்னை தமிழரசுக்கட்சியில் இணைத்து கொள்வதில் இழுபறிநிலை தோன்றியுள்ளமை உண்மையாகும். ஆனால் நான் பெரும்பான்மை கட்சிகளுடன் இணைய உள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில் எந்தவித உண்மைகளும் இல்லை. எனது அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் மக்களின் ஆணைக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.மேற்படி மாகாண சபை உறுப்பினருக்கு எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து போடியிடுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிலையில் அவர் பொரும்பான்மை கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் கருத்துக்கள் வெளிவருகின்றன. இவ்விடையம்குறித்து அவரிடம் திங்கட் கிழமை (06) தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்…….
சென்ற முறை நான் தமிழர் விடுதலைக் கூட்டணியூடாக தேர்தலில் போட்டியிட்டே மகாண சபை உறுப்பினரானேன். தற்போது அக்கட்சி கூட்டமைப்பில் இருந்து சற்று தொலைவில் இருக்கின்றமை யாவரும் அறிந்த விடயமே. இந் நிலைமை காரணமாக எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழரசுக் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என எனது ஆதரவாளர்கள் வேண்டியிருந்தனர் எனது விருப்பமும் அதுதான் இதற்கமைவாக தமிழரசு கட்சியில் இணைவது சம்பந்தமாக பொதுச்செயலாளருடன் சுமார் ஒரு வருடங்களுக்கு முன்னர் கலந்துரையாடியிருந்தேன். அவர் இதன்போது உங்களை கட்சியில் இணைத்து கொள்வதில் எவ்வித ஆட்சேபணைகளும் இல்லை உங்களுக்கு தேர்தலில் போட்யிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும், இதற்கு நீங்கள் கட்சியின் அங்கத்தவராக வேண்டும் எனவும் தெரிவித்து எனக்கு அங்கத்துவ படிவத்தினை வழங்கியிருந்தார்.
படிவத்தினை அவர் தரும்போது ஒரு நிபந்தனையை விதித்திருந்தார் நீங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் வகித்துவரும் உபதலைவர் பதவியிலிருந்தும் செயற்பாடுகளில் இருந்தும் விலகவேண்டும் என என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை நான் ஏற்று தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியின் அனைத்து செயற்படுகளிலும் இருந்து விலகிக்கொண்டேன். அதற்கான கடித்தின் பிரதியினையும் தமிழரசுக்கட்சி பொதுச் செயலாளரிடம் ஒப்படைந்திருந்தேன். ஆனால் இதுவரை என்னை தமிழரசுக் கட்சியின் அங்கத்தவராக ஏற்றுக் கொள்வதில் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றன. பல சந்தர்ப்பங்களில் நிரப்பிய விண்ணப்படிவத்தை ஒப்படைப்பதற்காக எத்தணித்த போதெல்லம் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டு வந்துள்ளன. இது சம்பந்தமாக திழரசுக் கட்சி தலைமைகளுடன் நான் பல தரப்பட்ட உரையாடல்களை நடாத்தியுள்ளேன். எவ்விதமான பயன்களும் கிடைத்ததாக தெரியிவில்லை.
சென்ற மாதம் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரிடம் எனது நிலைமை தொடர்பில் காலம் தாழ்த்தாது ஒரு முடிவை அறிவிக்கும்படி நான் கேட்டுக்கொண்டேன் அதற்கு அவர் உங்களை கட்சியில் இணைத்துக்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார் இதுதான் உண்மையாகும்.
நான் தற்போது அரசியல் ரீதியாக நிர்க்கதியாக்கப்பட்டு இக்கட்டான சூழ் நிலையில் உள்ளேன். அவ்வாறானதோர் நிலையிலும் தமிழ்த் தேசியத்தின்பாற் வைத்துள்ள பற்றுகாரணமாக தமிழரசுக்கட்சியில் இணைவதற்கான தொடர்முயற்சிகளை இற்றைவரை எடுத்தவண்ணம் உள்ளேன். இதற்காக தமிழரசுக்கட்சி தலமைகளிடம் இத்தகையை எனது நிலைப்பாட்டை நேரடியாக தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை கோரியிருக்கின்றேன். சந்தர்ப்பம் கிடைத்ததும் எனது தற்போதைய சூழ்நிலை குறித்து நேரடியாக தெரிவிப்பேன்.
இதற்கிடையில் எனது ஆதரவாளர்கள் இது குறித்து ஒரு தீர்க்கமான முடிவினை எடுப்பதற்காக மக்கள் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதனையும் மிகவிரைவில் ஏற்பாடு செய்து மக்களின் கருத்துக்களையும் பெற்றக் கொள்வேன். இதற்கு அமைவாகவே தேர்தலில் போட்டியிடும் முடிவினை நான் எடுப்பேன். நிற்சயமாக எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவேன் அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை ஆனால் நிற்சயமாக பெரும்பான்மைகட்சியுடன் இணைந்து போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. இதுதான் எனது தற்போதைய நிலைப்பாடாகும். எனவே எனது அரசியல் என்பது மக்களின் ஆணைக்கு அமைவாகவே இடம் பெறும் என்பதனையும் இத்தால் தெரிவிக்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்
0 Comments:
Post a Comment