26 Nov 2017

திருமண வீட்டு உணவு நஞ்சாகியதில் சுமார் 53 பேர் வைத்தியசாலையில் அனுமதி

SHARE
ஏறாவூர் நகரில் உள்ள திருமண வீடொன்றில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட பலர் உடல் உபாதைக்குள்ளாகிய நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஞாயிற்றுக்கிழமை 26.11.2017 நண்பகல் வரை சுமார் 53 பேர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகவீனமடைந்தவர்களில் 25 சிறுவர்கள் 18 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.
எனினும் இதுவரை அனுமதிக்கப்பட்டவர்களில் எவரும் கவலைக்கிடமான நிலையில் சுகவீனமடையவில்லை என்று பொறுப்பு வைத்திய அத்தியட்சகர் எஸ்.ஏ.சி.எம்.  பழீல் தெரிவித்தார்.

உடல் உபாதைக்குள்ளானவர்கள் தங்களுக்கு தொடர்ச்சியான வயிற்று வலி, வாந்தி தலைச் சுற்று, வயிற்றுப் போக்கு காணப்படுவதாக தெரிவித்தனர்.
ஏறாவூர் பள்ளியடி வீதியிலுள்ள திருமண  வீடொன்றில் வழங்கப்பட்ட கோழி இறைச்சி பிரியாணியை உட்கொண்டதையடுத்து இந்த உபாதை ஏற்பட்டுள்ளது.
முதலில் வயிற்றுவலியும் அதனைத் தொடர்ந்து  வயிற்றுப்போக்கும் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டர்கள் மேலும் தெரிவித்தனர்.

சமையல்காரரது வீட்டிலேயே திருமண பரிமாறலுக்கான உணவு சமைக்கப்பட்டதாக திருமண வீட்டார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பிரதேச சிரேஸ்ட பொதுச்சுகாதார அதிகாரி எம். புலேந்திரகுமார் உணவு சமைத்த வீட்டிற்கு சென்றபோதிலும் உணவுமாதிரிகள் எதனையும் எடுக்கமுடியவில்லை.

இதையடுத்து சுகவீனமடைந்தவர்களது வாந்தி மற்றும் மலம் ஒருதொகுதியையும் உணவு தயாரிப்பிற்குப் பயன்படுத்திய மூலப்பொருட்களையும்  எடுத்து பரிசோதனைக்குட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.







SHARE

Author: verified_user

0 Comments: