19 Oct 2017

மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவுக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை வெற்றி மாநகர ஆணையாளர் வி. தவராஜா

SHARE
மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவுக்குள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை வெற்றி கண்டு வருவதாக மாநகர சபை ஆணையாளர் வெள்ளத்தம்பி தவராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவுக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு, திண்மக் கழிவு முகாமைத்துவம் மற்றும் நகர தூய்மையாக்கல் பற்றி வியாழக்கிழமை 19.10.2017 கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
கடந்த வருடமும் இவ்வருடத்தின் ஆரம்பித்திலும் மட்டக்களப்பில் இருந்து வந்த டெங்கு அச்சுறுத்தல் சுகாதாரத் திணைக்களம் மற்றும் மாநகர சபை ஆகியவற்றின் கூட்டிணைந்த முயற்சியோடும் பொதுமக்களின் ஒத்துழைப்போடும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை, தெருக்களிலும், வாவி, வடிகான்கள், போன்ற  கண்ட கண்ட இடங்களில் மக்கள் கழிவுகளைக் கொட்டுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் தொடங்கி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையுள்ள நகரின் முக்கிய தெருவான கோவிந்தன் வீதி முழுக்க காலை வேளையில் குப்பைத் தொட்டியாக காட்சியளிக்கும் நிலை காணப்படுகின்றது.

இந்த வீதியில் நகர பிரதான பாடசாலைகள், வங்கிகள், சிறைச்சாலை, தேவாலயம், கோயில், பல்வேறு நிறுவனங்கள் என்பன உண்டு, மக்கள் பரபரப்பாக போக்குவரத்துச் செய்யும் இந்தத் தெருவை சுத்தமாக வைத்திருப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் நோயாளிகளும் நோயாளர்களது உறவினர்களும் பொலித்தீன் பைகளில் கழிவுகளைக் கட்டி வீதியோரத்திலும் கான்களுக்குள்ளும் வீசு விட்டுச் செல்கின்றனர்.

இது நகர அசுத்தத்திற்கும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாவதற்குத் தோதாகவும் அமைந்து விடுகின்றது.

எனவே இந்த விடயத்தில் நாளாந்தம் மட்டக்களப்பு நகர குடியிருப்பாளர்களும், நாளாந்தம் அலுவல்களுக்காக நருக்கு வரும் பொது மக்களும் அக்கறை எடுக்க வேண்டும்.

தூய்மையற்ற முறையில் தமது வீட்டையும் நகரத்தையும் பராமரிப்பதன் மூலம் இன மத பிரதேச எல்லைகளைக் கடந்து உயிரழிவை ஏற்படுத்தும் டெங்கு ஆபத்திற்கு வழிசமைத்து விடக் கூடாது.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: