பல வருடங்களாகத் தூர்ந்து போன நிலையில் துருப்பிடித்தும், காடுமண்டிப் போயும் கிடக்கும் வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள புனரமைப்பு செய்யவும், அதன் இயந்திரங்களை திருத்தம் செய்வதற்காகவும் இந்திய எஸ்.வீ தொழிற்சாலையின் பொறியியலாளர் குழுவினர் வெள்ளிக்கிழமை மாலை அங்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.கடதாசி ஆலையின் முன்னாள் தவிசாளர் மங்கள சீ செனரத் உட்பட ஏனைய ஆர்வலர்களால் அங்கு வருகை தந்த இந்திய பொறியியலாளர் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலைக்குள் அழைத்துச் செல்லப்பட்டு ஆலையின் தற்போதைய நிலைமை குறித்து காண்பிக்கப்பட்டனர்.
இயக்கமற்றுப் போயுள்ள ஆலையின் தற்போதைய நிலைமைகளைப் பார்வையிட்ட பின்னர் இந்திய பொறியியலாளர் குழுவின் தலைவரும் எஸ்.வீ கைத்தொழிற்சாலையி;ன பிரதம பொறியிலாளருமான எஸ். பழனியப்பன் கருத்துத் தெரிவித்தார்.
துருப்பிடித்து செயற்பாடற்றுப் பழுதுபட்டுப்போயுள்ள காகித ஆலையின் இயந்திராதிகளை பழுதுபார்க்கவும் அதனை மீள இயங்கச் செய்யவும் முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், இந்தக் காகித உற்பத்தித் தொழிற்சாலையை மீள இயங்கச் செய்வதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 100 மெட்ரிக் தொன் காகிதங்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதுடன் பழுது பார்க்கப்படும் இந்த ஆலை சுமார் இருபது வருடங்களுக்கு சீராக இயங்கச் செய்ய வழிவகை உள்ளதாகவும் தெரிவித்தார்.
மெச்சத்தக்க உற்பத்திக்காக இருமுறை விருதுகளைப் பெற்ற வாழைச்சேனை காகித ஆலையில் சுமார் 3000 மேற்பட்ட தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகத் ஊழியர்கள் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment