29 Oct 2017

ஸ்திரத்தன்மை சீர்குலைந்தால் மட்டக்களப்பு இன வன்முறைக்கு உள்ளாகலாம் எச்சரிக்கிறார் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ்.

SHARE
தற்போதைய நிலைமையில் இனவாதமும் மதவாதமும் தூண்டப்படுகின்றன. இதன் காரணமாக ஸ்திரத்தன்மை சீர்குலைந்தால்  மட்டக்களப்பு வெகு சீக்கிரத்தில் இன வன்முறைக்கு உள்ளாகலாம் என தான் அஞ்சுவதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ். 
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் ஸ்திரத் தன்மை சீர்குலைவு குறித்தும் இன வாத செயற்பாடுகள் குறித்தும் ஞாயிற்றுக்கிழமை 29.10.2017 கருத்து வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், இனவாதத் தீ இன்னமும் நீறு பூத்த நெருப்பாக உள்ளே பொருமிக் கொண்டிருக்கின்றது.

குழப்பகரமான நிலை நீடிக்கிறது. காணிப் பிரச்சினை, புதிய உள்ளுராட்சி மன்ற யோசனைகள் அடங்கிய எல்லைகள், வர்த்தகக் கம்பெனிகளின் ஆதிக்கம், அரசாங்க அதிகாரிகளின் ஊழல் மோசடிகள்,  புதிய அரசியலில் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி பிரதேச அரசியல்வாதிகள் எவரும் முன்னிலைப்படுத்தவில்லை.

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் சட்டம் ஒழுங்கு விதிகளே இனங்களுக்கிடையில் சுமுக சூழ்நிலையையும் சகவாழ்வையும் ஏற்படுத்தப் போதுமானது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாததால்தான் இத்தனை குழப்பங்களும் உருவாகின்றன.

பொறுப்பற்ற தன்மை நிலவுகிறது. மாவட்டத்தில் அரசாங்க அதிபர் இல்லை, பல பிரதேச செயலகங்களுக்கு பிரதேச செயலாளர்கள் இல்லை. கடமையில் இருக்கும் அதிகாரிகள் கொழும்பில் இருந்து வரும் உத்தரவை அல்லது அரசியல் அதிகார உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இவ்வருடம் டிசெம்பரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வன்செயல்கள் இடம்பெற சாத்தியம் உண்டு, வெள்ளம், வறுமை, வளங்கள் வாய்ப்புக்கள் குறைவு. இருக்கும் வளங்களுக்கும் வாய்ப்புக்களுக்கும் போட்டிகள் அதிகம். இடையீடு செய்ய எவருமில்லை. இழப்பு மிக அதிகமாக இருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அரசியலுக்காக டயஸ்போராக்கள், மதவாத அமைப்புக்களிடமிருந்து குழப்பவாதிகள்  நிதியைப் பெறுகிறார்கள்.

பெருங்கலகம் ஏற்பட வாய்ப்புண்டு,  குழப்ப நிலை உருவானால் ஆபத்து அதிகம் வீதிக்கு இராணுவம் வந்து நிற்கும்.

கொழும்பிலிருந்து இந்த நிலைமையைச் சீர் செய்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது.

கடந்த வெள்ளிக்னிழமை வாழைச்சேனையில் இடம்பெற்ற தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான விரும்பத் தகாத வெறுப்புணர்வை பொலிஸார் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த விதம் இந்த மாவட்டத்தில் இன முறுகலை ஏற்படுத்த எங்கிருந்தோ மறைமுக சக்திகள் கங்கணம்கட்டி நிற்பதைப் புலப்படுத்துகின்றது.

முச்சக்கரவண்டி நிறுத்துமிடம், பஸ் தரிப்பிடம் அமைக்க அடிக்கல் நாட்டிய இடம் என்ற ஒரு விடயத்தில் சர்ச்சை இருக்குமாக இருந்தால் சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிக்க மக்களை வழிநடாத்தும் பொலிஸார் அதற்கான வழிமுறைகளைக் காட்டியிருக்க வேண்டும்.

ஆயினும், தமிழ் சமூகத்திலிருந்தும் முஸ்லிம் சமூகத்திலிருந்தும் அவ்வளவு பெரிய கூட்டம் மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் அதுவும் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் திரள்வதற்கு அனுமதித்து பொலிஸார் ஏன் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது புரியாத புதிராக இருக்கின்றது.

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் மோதிக்கொள்ளட்டும் அதனால் “மௌனம் காக்குமாறு”கோரும்  மேலிடத்திலிருந்து வந்த இனவாதத்தை தூண்டும் அரசியல் உத்தரவை பொலிஸார் நடைமுறைப்படுத்தியது போலத்தான் அந்த நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.

சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் இல்லை. வீதிப் போக்குவரத்துச் சட்டத்தை பொலிஸார் அமுல்படுத்த வேண்டும், மஞ்சள் கடவையில் முச்சக்கரவண்டி நிறுத்தல் செய்ய முடியாது. பஸ் நிறுத்துமிடம் அமைப்பதற்கு தனது பன்முக வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் ஒதுக்கிய நிதியில் மக்களின் வரிபவ்பணத்தில் சேர்ந்த அரச பணம் கொண்டு கட்டப்படுகிறது.

பாதசாரிக் கடவைக்குப் பக்கத்தில் முச்சக்கர வண்டிகள் நிறுத்தி வைக்க முடியாது. அப்படியாயின் உடனடியாக பஸ் நிலையக் கட்டுமானத்தை தகர்த்தவர்களை கைது செய்திருக்க வேண்டும்.

இளைஞர்களே பொல்லு தடிகளுடன் வீதிக்கு வந்து வாக்கு வாதம் செய்து கலகத்திற்காக காத்திருக்கும் பொழுது வீதிப் போக்குவரத்துச் பொலிஸார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.

கலவரத்தை உண்டுபண்ணும் நோக்கத்துடன்தான் அவ்விடத்தில் அத்தனை கூட்டம் கூடியது. 5 பேருக்கு மேற்பட்டோர் குதர்க்கமாக ஒரு தெருவில் கூடினால் அவர்களைக் கைது செய்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவேண்டியது பொலிஸாரின் முழுமுதற் கடமை.

நல்லவேளையாக அவ்விடத்தில் குவிந்த தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு வன்முறையில் நாட்டமில்லாதபடியால் மேலதிக அழிவுகள் தவிர்க்கப்பட்டது. ஆயினும், ஒரு விஜசமின் வேலையில் ஒருவருக்கு கல்லெறியினால் காயம்பட்டு விட்டது.

விரைவாகத் தீர்வை நாட ஆயுதம் அல்லது தீவிரவாதத்தை எதிர்பார்க்கும் நிலைக்கு இளைய சமுதாயத்தைத் தள்ளக் கூடாது.



SHARE

Author: verified_user

0 Comments: