மனிதனின் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் பாரம்பரிய கலைகளை வளர்க்க ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாகும் என ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ. தங்கத்துரை தெரிவித்தார்.கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மண்முனை மேற்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய 'கிராமிய கலைகளின் ஆற்றுகை' நிகழ்வு வவுணதீவு பிரதேசத்தின் நாவற்காடு சித்திவிநாயகர் ஆலய முன்றலில் புதன்கிழமை பிற்பகல் (18.10.2017) நடைபெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயவலாளர் எஸ். சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை கலாசாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளான கூத்து, கும்மி, வசந்தன், கரகம், நாட்டார் பாடல் உள்ளிட்ட நிகழ்வுகளின் ஆற்றுகைகளும் அது தொடர்பிலான கருத்துரைகளும் இடம்பெற்றன.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய தங்கத்துரை@ கலை கலாசார நிகழ்வுகள் எமது பாரம்பரிய பண்பாடுகளையும் கலைகளையும் அழிந்துவிடாமல் எதிர்கால சந்ததிக்கும் கொண்டு செல்ல வழிவகுக்கும் எளிமையான ஒரு ஊடகமாகும்.
ஆகவே எமது கலைஞர்கள் பாரம்பரிய தமிழ் கலைகளை வளர்க்க தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது காலத்தின் தேவையாகும்.
இளம் சமுதாயத்தினர் மிகவும் திறமைவாய்ந்தவர்கள் அவர்கள் கல்வி, விளையாட்டு போன்ற துறைகளுடன் மட்டும் நின்றுவிடாது தமக்குச் சொந்தமான பாரம்பரிய கலைகளையும் தாம் போகுமிடமெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்தக் கலைகளை வளர்ப்பதற்காக அரசும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் கலைஞர்களின் வளர்ச்சிக்காக போதிய உதவிகளை தொடர்ந்தும் வழங்க வேண்டும்.
இவ்வாறு உதவிகளும் ஊக்கங்களும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இலைமறைகாயாக இருக்கும் கலைஞர்கள் வெளியே வருவார்கள்.
கலைகளில் நாட்டார் பாடல் என்பது தமிழ் மக்களிடையே பிறப்பிலிருந்து இறப்பு வரை பின்னிப் பிணைந்துள்ளது.
அது தாலாட்டில் தொடங்கி விளையாட்டுக்களிலும், விவசாயப் பாடலாகவும், காதல் பாடலாகவும் இவ்வாறு சந்தேச நிகழ்வுகளிலும் துக்க சம்பவங்களிலும் எம்மிடையே தொடர்ந்து வருகின்றது.
இத்தகைய பாரம்பரிய தமிழ் கலைகளும் நிகழ்வுகளும் ஒரு மனிதனது உள்ளத்தையும் வாழ்க்கையையும் நல்வழிப்படுத்துவதாக அமைந்துவிடுகின்றது.
எனவே அத்தகைய கலைகளை நாம் வளர்க்க ஊக்கமளிக்க வேண்டும்” என்றார்.
பிரதேச கலாசார உத்தியோகத்தர் எம். சிவானந்தராசா ஒழுங்குசெய்த இந்நிகழ்வில் கலாபூசனம் க.மயில்வாகனம், கலாபூஷசனம் எம். அருளம்பலம், அதிபர் ரி. கோபாலப்பிள்ளை உள்ளிட்டோரும் கலை ஆர்வலர்களும் கலையாற்றல் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment