இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 49 ஆயிரம் ஏக்கர் சிறுபோகச் செய்கை பாரிய வெற்றி கண்டுள்ளதாக மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் நெற்செய்கைக்குப் பொறுப்பான பாடவிதான உத்தியோகத்தர் சின்னத்தம்பி சித்திரவேல் (Paddy- Subject Matter
Officer) தெரிவித்தார்.
இதுபற்றி வியாழக்கிழமை 12.10.2017 மேலும் விவரம் தெரிவித்த அவர் கடந்த 5 வருட காலத்தில் இவ்வாறானதொரு பாரிய இலாபத்துடன் கூடிய நெல் அறுவடை விவசாயிகளுக்குக் கிடைத்துள்ளது.
இத்தகையதொரு வெற்றியை அடைவதற்கு பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. போஷணைத் திட்டம் உட்பட நீர்ப்பாசனம் உள்ளிட்ட இன்னபிற ஆதரவுச் சேவைகளும் உதவியிருக்கின்றன.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களம் முன்னெடுத்துள்ள ஒருங்கிணைந்த தாவர போஷணைத் திட்டமே பிரதான காரணமாகும்.
சேதன மற்றும் அசேதனப் பசளைகளின் கூட்டுப் பிரயோகமாக இந்த ஒருங்கிணைந்த தாவர போஷணைத் திட்டம் உள்ளது.
இதனால் மண்வளத்தைக் கூட்டி நெற்பயிருக்கு வேண்டிய போஷணைச் சத்துக்களை அகத்துறுஞ்சி நெற்பயிர் வீரியமாக வளரும் திறன் அதிகரித்து அதன் மூலம் விளைச்சலும் அதிகரிக்கிறது.
அதேவேளை விவசாயிகள் ஏக காலத்தில் விதைப்பதும், ஏக காலத்தில் அறுவடை செய்வதும் பீடைத் தாக்கங்களிலிருந்து நெற்பயிரைப் பாதுகாக்கவும் சேதங்களைத் தவிர்க்கவும் உதவியிருக்கின்றது.
மேலும் சிறுபோகச் செய்கையின்போது பகல் காலங்களில் கிடைத்த அதிகளவு சூரிய ஒளி நெல் மணிகள் உற்பத்தியாவதற்குத் தோதாய் அமைந்திருந்தது.
கூடவே, இம்முறை நெல்லுக்கு கிடைத்த கிராக்கி விவசாயிகளுக்கு அதிக இலாபம் பெற உதவியிருக்கிறது.
யுத்தம் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை செயற்கை அழிவுகளினால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்த மட்டக்களப்பு விவசாயிகள் இம்முறை சிறுபோகத்தின் மூலம் அதிக அறுவடையைக் கண்டு இலாபமும் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்கள்.
இதனால் இம்முறை பெரும்போக நெற் செய்கையையும் உப உணவுப் பயிச் செய்கையையும் விவசாயிகள் ஊக்கத்தோடு செய்ய ஆயத்தமாக உள்ளார்கள்.” என்றார்.
0 Comments:
Post a Comment