28 Sept 2017

இருவேறு நேரெதிர் நிலைப்பாடுகளுடன் செயற்பட வேண்டிய எந்தத் தேவையும் எனக்கில்லை. கிழக்கு மாகாண முதலமைச்சர்.

SHARE
இருவேறு நேரெதிர் நிலைப்பாடுகளுடன் செயற்பட வேண்டிய எந்தத் தேவையும் தனக்கில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
சமகால அரசியல் நகர்வுகள் குறித்து வியாழக்கிழமை 28.09.2017 கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது@
பொதுவாகவே அரசியல்வாதிகளிடம் காணப்படும் அரசியல் வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கையில் காணப்படும் இருவேறுபட்ட நேரெதிர் நிலைப்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுவது இயல்பானதே.

ஆயினும், அத்தகைய போக்குகளிலிருந்து நான் முற்றிலும் வேறுபட்டவன் என்பதை என் வாழ்க்கை நெடுகிலும் நிரூபித்து வந்துள்ளேன்.

அரசியல் ஆதாயங்களுக்காக மேடைப் பேச்சுக்களில் ஒன்றையும், அதிகாரத்தில் இருக்கும்போது வேறொன்றையும், பொதுவாழ்க்கையில் மற்றொன்றையும் நடைமுறையாகக் கொள்ள வேண்;டிய எந்தத் தேவையும் எனக்கில்லை.
தமிழ் முஸ்லிம் ஒற்றுமை என்று நான் மேடைகளில் முழங்கியதையே அதிகாரத்தில் இருக்கின்ற போதும் செயற்படுத்துகின்றேன்.

சிறுபான்மையினருக்கான உரிமைகள் என்ற விடயத்தில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று செயற்படுவதற்கான போக்கு என்னிடம் கனவிலும் இருந்ததில்லை.
அதேபோன்று அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக நான் எதனையும் பயன்படுத்தியதில்லை.

எனது ஆட்சிக் காலத்தில் அனைத்து சமூகங்களையும் இணைத்த அபிருத்திக்கான செயற்திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
இதில் எங்குமே இனப்பாகுபாட்டைக் காண முடியாது.

எனது அயராத முயற்சியில் எனது சொந்த ஊரான ஏறாவூரில் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச தரம் வாய்ந்த ஆடைத் தொழிற்சாலைகளில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 180 பேர் தொழில் வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். இவர்களில் 120 இற்கும் அதிகமானவர்கள் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் முஸ்லிம்களும் சிங்களவர்களுமாவர்.

அரசியல் உரிமைகள், அபிவிருத்திகள், வேலை வாய்ப்புக்கள், பதவி உயர்வுகள், நிதிப் பங்கீடுகள், வளப் பங்கீடுகள், கருத்துப் பரிமாற்றங்கள், ஆலோசனைகள் இவை போன்ற எவற்றிலும் எனது அதிகாரத்தின் கீழ் இனப்பாகுபாடு பாரபட்சம் ஏமாற்றுக்கள் மோசடி, ஊழல் இருந்தது கிடையாது.
இத்தகைய விடயங்களில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி கடந்த காலங்களில் செயற்பட்டு இனங்களுக்கிடையில் பகைமை உண்டாக்கி வந்தவர்களே இப்பொழுதும் இவற்றை தமது மூலமந்திரமாகக் கொண்டுள்ளார்கள்.

ஆனால், இத்தகைய கீழ்த்தரமான பச்சோந்தி அரசியல்வாதிகளை தற்கால அறிவுடைமைச் சமூகம் சரியாக அடையாளம் கண்டு கொள்ளும் என்று நான் திடமாக நம்புகின்றேன்.

இலங்கையில் அரசியல் உரிமைகள் தொடங்கி அபிவிருத்தி வரையுள்ள அனைத்து அம்சங்களிலும் இனி என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் சிறுபான்மை இனங்கள் இணைந்து பயணிப்பதே விமோசனம் தரக் கூடியது. 
நன்னோக்கமுள்ளவர்கள் இதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: