25 Sept 2017

வென்றவன் தோற்றான் தோற்றவன் அழிந்தான் என்ற போக்கை மாற்ற வேண்டும். தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் ஆர். மனோகரன்

SHARE
நமது நாட்டின் 30 வருட கால முரண்பாட்டுச் சூழலில் “வென்றவன் தோற்றான் தோற்றவன் அழிந்தான்” என்ற போக்கை நாம் மாற்றியாக வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா  மனோகரன் தெரிவித்தார்.
மாவட்ட சர்வ மதப் பேரவையின் உறுப்பினர்களுக்கான “அரசியல் மறுசீரமைப்பு” (ஊழளெவவைரவழையெட சுநகழசஅள) எனும்  தொனிப்பொருளிலமைந்த செயலமர்வு கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் ஞாயிறன்று (செப்ரெம்பெர் 24, 2017) இடம்பெற்றது.

மாவட்டத்திலுள்ள சர்வமதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் சமூக செயற்பாட்டாளர்களுமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 40 பேர் இந்த செயலமர்வில் பங்குபற்றினர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனோகரன்@
சர்வமத அங்கத்தவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் தொடராக புதிய அரசியல் யாப்புக்கள் பற்றி அறிந்திருத்தல் வேண்டும் என்பதின் அவசியத்தைக் கருத்திற் கொண்டு இந்தப் பயிற்சி நெறி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.

நமது நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் புதிய அரசில் மறுசீரமைப்புப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக நாம் இருந்து விட முடியாது.

சர்வமத உறுப்பினர்கள் சமூகத்தோடு இருப்பவர்கள். ஆதலால் சமூத்திற்கு உள்ளேயும் சமூகத்திற்கு வெளியேயும் இடம்பெறும் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துத் கொண்டிருப்பவர்கள். ஆகையினால் சர்வமத உறுப்பினர்களுக்கு சமகால அரசில் அறிவு இன்றியமையாததாய் ஆகிவிடுகின்றது.
சமகாலப் பிரச்சினைகளில், அரசியல் முன்னெடுப்புக்களில் நமக்குள்ள அக்கறை எதிர்கால சந்ததிகளை வழிநடாத்தவும் முரண்பாடில்லாத உடன்பாடு கண்ட சமூகமாக ஐக்கியப்பட்டு வாழவும் வழியேற்படுத்திக் கொடுக்கும்.

எதிர்காலத்தில் குழப்பமில்லாத சமுதாயத்தைத் தோற்றுவிப்பது சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்

எல்லோருக்கும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதையும், சட்டவாட்சியை முன்னேற்றுவதையும், அதனைப் பாதுகாப்பதையும் நாட்டுப் பிரஜைகள் அனைவரும் தங்களது முழுமுதற் கடமையாகக் கொள்ள வேண்டும்.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: