முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வியாழக்கிழமை (21) மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் அவர், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குளுவினமடு இடம்பெறும் பிரதான நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தின் சகல திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் பயனாளிகள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் மாவட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமூக, பொருளாதார மேம்பாட்டுத்திட்டப் பணிகளைப் பார்வையிடுவதுடன், செங்கல் உற்பத்தித் தொழிலுக்கான உபகரணங்கள், ஆடுகள் என்பனவற்றையும் வாழ்வாதாரத் தொழிலுக்காக வழங்கி வைக்கவுள்ளார்.
மேலும், நிகழ்வுகளில் அவர் பயனாளிகளுடன் கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேசத்துக்குட்பட்ட நீறுபோட்டசேனை குளத்தினை விவசாய அமைப்புகளிடம் கையளிக்கும் வைபவமும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
மேலும், மாவடிமுன்மாரி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மகப்பேற்று நிலையத் திறப்பு விழாவிலும் அவர் கலந்த கொள்ளவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment