மட்டக்களப்பு வாகரையில் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைப் பின்பற்றுவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு ஒரு துண்டு மயானக்காணி வழங்கப்பட்ட விடயத்தில் சிலர் சர்ச்சையைக் கிளப்பியதால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வாகரையில் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைப் பின்பற்றுவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லாததால் நீண்டகாலமாக இருந்து வந்த சர்ச்சை கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், இவ்விடயத்தில் பிரதேச செயலாளர் எடுத்துக் கொண்ட நடவடிக்கை பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் பிரதேச செயலாளரைப் பணித்திருந்தார்.
அதன்பிரதிபலனாக வாகரைப் பிரதேச செயலளார் பிரிவிலுள்ள கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மதப்பிரிவுகளைப் பின்பற்றுவோரின் நலன்கருதி வாகரைப் பிரதேசத்தில் மயானத்திற்கு இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வாகரைப் பதில் பிரதேச செயலாளர் கே. தனபாலசிங்கம் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகரை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கணுக்காமடு எனும் கிராமத்தில் 40ஆம் கட்டைக்கு அருகில் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் ஒரு ஏக்கர் நிலம் இனங்காணப்பட்டுள்ளது.
இக்காணியை அரச சட்டத்தின் கீழ் பாராதீனம் செய்வதற்கான ஏனைய தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தங்களுக்குத் தயவுடன் அறியத் தருகின்றேன் என்று ஆளுநருக்கு பிரதேச செயலாளரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய இக்காணியைப் பார்வையிட மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்களும் வாகரைப் பிரதேசத் வாழும் கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைச் சார்ந்த ஆர்வலர்களும் கடந்த வெள்ளிக்கிழமை 08.09.2017 குறித்த காணி அமைந்துள்ள இடத்திற்குச் சென்றபோது அங்கு திடீரென வந்து சேர்ந்த ஒரு குழுவினர் சர்ச்சையில் ஈடுபட்டதால் இவ்வகாரத்தை வாகரைப் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வாகரைப் பிரதேச சர்வமத ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.
இதுவிடயமாக இருசாராரையும் திங்களன்று 11.09.2017 வாகரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்த பொலிஸார், புதன்கிழமை 13.09.2017 பிரதேச செயலாளர் தலைமையில் அனைத்துத் தரப்பினரும் கலந்து பேசி முடிவெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குருகுலசிங்கம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment