சகோதர மொழிகளைக் கற்றுக் கொள்ளுதல் சகவாழ்வுக்கு உதவும் என “ரணவிரு சேவா” அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச். கீர்த்திகா ஜயவர்தன தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையினால் (Batticaloa District Civil Citizen Council) 80 பேருக்கு இலவசமாக சிங்கள மொழிக் கல்வி ஞாயிற்றுக்கிழமை 24.09.20174 ஆரம்பித்து வைக்கப்பட்டபோது மாணவர்கள் மத்தியில் அவர் கருத்துப் பரிமாறினார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்@
நான் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஒரேயொரு சிங்கள சமூகத்தைச் சேர்ந்த அலுவலராகப் பணிபுரிகின்ற போதும் எனக்கு எந்தவிதமான சங்கடமோ அச்ச உணர்வோ இருப்பதில்லை. மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் தமிழ் மொழி பேசும் சக அலுவலர்கள் எனக்கு அவர்களது பூரண ஒத்துழைப்பையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்துவதால் என்னால் சிறந்த சேவையாற்ற முடிகின்றது.
நாம் தேவையுடைவர்களை நாடிச் சென்று சேவை புரிகின்ற போது இன மத மொழி பிரதேச வேறுபாடுகள் எதற்கு? அவையெல்லாம் தேவையில்லாத மனப்பாங்குகள்.
அரச உத்தியோகமாக இருந்தாலும் அல்லது சாதாரணமாக ஒரு சுற்றுப் பயணம் செய்வதாக இருந்தாலும் பஸ்ஸில் பயணிப்பதாக இருந்தாலும் அடுத்த சகோதர மொழியைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
சகோதர மொழியறிவு நமக்குள் எழும் முரண்பாடுகளைத் தவிர்த்து உண்மையான புரிந்துணர்வையும், உதவும் மனப்பான்மையையும், சகவாழ்வையும் சமாதானத்தையும் ஏற்படுத்தித் தரும் சக்தி வாய்ந்த ஒரு கருவியாகும்.
மட்டக்களப்பில் தமிழ் பேசும் சமூகத்தவர்கள் சிங்கள மொழி கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைக் கொண்டிருப்பதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த அர்ப்பணிப்புள்ள முயற்சிக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கத் தயாராக உள்ளேன்” என்றார். இந்நிகழ்வில் சகவாழ்வுக்கான செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment