25 Sept 2017

மாகாணசபையின் ஆட்சிக்கால நீடிப்பு நான் ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டேன் -வியாழேந்திரன் எம்.பி.

SHARE
இந்த நாட்டில் உருவாக்கப்படுகின்ற எதிர்கால தலைவர்கள் இனவாதத்தினை விரும்பாத மதவாதத்தினை விரும்பாத எல்லோரையும் தங்களுக்கு இணையாக நேசிக்ககூடிய தலைவர்களாக உருவாக்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்  தெரிவித்தார்.
மக்களின் ஆணையை மீற மாகாணசபைகளின் ஆயட்காலத்தினை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தான் தொடர்ந்து எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நாவற்குடா புனித மரியாள் அங்கிலிக்கன் தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா,சுற்றுமதில் மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.

ஆலயத்தின் பங்குத்தந்தை திவ்வியபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட  நிதியொதுக்கீடு மற்றும் ஆலயத்தின் நிதிப்பங்களிப்புடன் இந்த முன்பள்ளி,சிறுவர் பூங்கா மற்றும் சுற்றுமதில் என்பன அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்புவிழாவில் காத்தான்குடி பொலிஸ்நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜெயசீலன்,அருட்தந்தையர்கள்,முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த நாடு சுதந்திரம் அடைந்த காலம்தொடக்கம் இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் தங்களுக்கு இணையாக சிறுபான்மை சமூகத்தினை நேசிக்கவில்லை,நேசிக்க தவறியுள்ளார்கள்.

இந்த நாட்டில் அனைவரும் இனவாதம் உள்ளவர்கள் அல்ல,மதவாதமுள்ளவர்கள் அல்ல.மூவினங்களிலும் இனவாதத்தினையும் மதவாதத்தினையும் விரும்பாதவர்கள் உள்ளனர்.ஆனால் பெரும்பான்மை சமூகத்திற்கு தலைமைதாங்கிய தலைவர்களே தாங்கள் அரசியல் செய்வதற்காக மக்கள் மத்தியில் இனவாத்தினையும் மதவாதத்தினையும் மக்கள் மத்தியில் விதைத்து இந்த நாட்டினை ஆட்சி செய்துவந்துள்ளனர்.

அதன் காரணமாகவே இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான தமிழ் சமூகம் காலணித்துவ ஆட்சியின் பின்னர் பல்வேறு இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துவந்துள்ளது.அதனை நாங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

கடந்த வியாழக்கிழமை மூன்றாவது அரசியல்யாப்பு பாராளுமன்றத்திற்கு வருவதற்கான இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த நல்லாட்சிகொண்டுவருகின்ற அரசியல் யாப்பில் கூட சமஸ்டிக்கு இடமளிக்காத வகையில் பிளவுபடமுடியாத,பிரிக்கமுடியாத ஒற்றையாட்சி என்ற பதம் அங்கு பாவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி பௌத்த மதத்திற்குத்தான் முதன்மை இடமென்ற விடயமும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.  
இந்த நாட்டில் ஏனைய மதங்களையும் தங்களது மதத்திற்கு இணையாக நேசிக்ககூடிய தலைவர்கள் யாரும் இந்த நாட்டில் இல்லையென்றே கூறவேண்டும்.

இந்தியா இலங்கையினை விட 60மடங்கு அதிகமான சனத்தொகையினைக்கொண்ட நாடு.அங்கு இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளபோதிலும் அதன் அரசியல் சாசனத்தில் சமயசார்பற்ற நாடு என்ற பதமேபாவிக்கப்பட்டுள்ளது.மூன்று இனங்களும் இரண்டு மொழிகளும் பேசுகின்ற இந்த நாட்டில் விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கு இந்த நாட்டின்  தலைவர்களின் மனங்கள் பக்குவமடையவில்லை.

இந்த நாட்டில் உருவாக்கப்படுகின்ற எதிர்கால தலைவர்கள் இனவாதத்தினை விரும்பாத மதவாதத்தினை விரும்பாத எல்லோரையும் தங்களுக்கு இணையாக நேசிக்ககூடிய தலைவர்களாக உருவாக்கப்படவேண்டும்.அனைத்து மக்களையும் சமமாக பார்த்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற தலைவர்கள் உருவாக்கப்படவேண்டும்.

இது ஜனநாயக நாடு என்று சொல்கின்றோம்.இந்த ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் பேச்சளவில் இல்லாமல் நடைமுறையில் இருக்கவேண்டும் என்பதையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம்.

மக்களால் வாக்களிக்கப்பட்டு தெரிவுசெய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள்,மக்கள் சம்மதம் கிடைக்கும் வரையில் நடாத்தப்படும் ஆட்சிதான் உண்மையான ஜனநாயகம்.கிழக்கு மாகாணசபையின் பதவிக்காலம் இந்த மாத இறுதியுடன் நிறைவுபெறுகின்றது.மக்கள் வழங்கிய ஆணை நிறைவுபெறுகின்றது.

நிறைவுபெற்றால் மாகாணசபையினை கலைத்துவிட்டு தேர்தலுக்கு வரவேண்டும்.மாகாணசபையின் ஆட்சிக்காலத்தினை நீடிக்ககூடாது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் நான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றேன்.மக்கள் ஆணைக்கால் நிறைவடைந்தால் அதனை கலைத்துவிட்டு தேர்தலை அறிவிக்கவேண்டும்.மக்களிடம் அது கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதில்; நான் உறுதியாகவுள்ளேன்.
கடந்த புதன்கிழமை உள்ளுராட்சி மாகாணசபை சட்ட திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தது.அதன் மூலம் பெண்களின் அதிகளவான பிரதிநிதித்துவம் வழங்கப்படவுள்ளது.அதனை நாங்கள் மிகவும்  வரவேற்கின்றோம்.ஆனால் மாகாணசபையின் ஆட்சிக்காலம் முடிந்தால் உடனடியாக தேர்தல் அறிவிக்கப்படவேண்டும்.அதுவே சரியான ஜனாநாயகம். 
ஆனால் தேர்தலை நடாத்தாமல்காலத்தினை இழுத்தடித்து மாகாணசபையின் அதிகாரத்தினை ஆளுனரிடம் வழங்கும் செயற்பாட்டினை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஆளுனர் என்பவர் மக்களினால் தெரிவுசெய்யப்படாத ஒருவர்.அரசாங்கத்தினால் நேரடியாக தெரிவுசெய்யப்படும் ஒருவர்.மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் ஆளுனர் மாகாணத்தினை நிர்வகிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது.எந்த மாகாணசபை என்றாலும் அதன் பதவிக்காலம் முடிந்தால்தேர்தல் உடனடியாக நடாத்தப்படவேண்டும்.

இதனை நான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதன் காரணமாக கடந்த புதன்கிழமை நடைபெற்ற உள்ளுராட்சி மாகாணசபை சட்ட திருத்தம் தொடர்பிலான வாக்கெடுப்பில் இருந்து நான் வெளியேறினேன்.

அது தொடர்பில் பலர் பல கருத்துக்களை கூறலாம்.பல விமர்சனங்களை முன்வைக்கலாம்.அது தொடர்பில் நான் கவலைகொள்ளப்போவதில்லை.நாங்கள் மக்களினால் தெரிவுசெய்யப்பட்டவர்கள்.அவர்களின் ஆணைக்கு ஏற்றவாறே ஆட்சிசெய்யவேண்டும்.அதனை பாராளுமன்றமோ யாருமோ கட்டுப்படுத்தமுடியாது.

நல்ல விடயங்களை நாங்கள் வரவேற்கின்றோம்.ஆனால் மக்கள் ஆணைக்கு முரணான விடயங்களுக்கு எமது எதிர்ப்பினை தெரிவிப்போம்.

SHARE

Author: verified_user

0 Comments: