மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையினால் இலவசமாக சிங்கள மொழிக் கல்வி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபைச் செயலாளர் (Batticaloa District Civil Citizen Council) எச்.எம். அன்வர் தெரிவித்தார்.
இன ஐக்கியத்திற்கும் அறிவாற்றல் விருத்திக்கும் மொழியறிவு முக்கியம் என்பதால் இந்த சக மொழி வகுப்புக்களை இலவசமாக நடாத்துவதற்கு திட்டம் வகுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்தில் இந்த இலவச சிங்கள மொழி வகுப்புக்கள் செப்ரெம்பெர் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் 8 மாத கால பயிற்சி நிறைவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வியாழக்கிழமை கிரானிலுள்ள “றெஜி” கலாசார மண்டபத்தில் இடம்பெறும் அங்குரார்ப்பண நிகழ்வில் பயனாளிகளான மொழிக் கல்வி பயிலுவோரும், மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபை உறுப்பினர்களும், வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், கிரான் பிரதேச செயலாளர் உட்பட இன்னும் பல சமூக ஆர்வலர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் சமூக சகவாழ்வுக்காக அர்ப்பணித்துள்ள எழுத்தாளர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையினால் இதுவரை ஏற்கெனவே இரு முறை நடாத்தப்பட்ட சிங்கள மற்றும் ஆங்கில மொழிக் கல்வி வகுப்புக்களில் 135 பேர் பங்குபற்றி பயனடைந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment