25 Sept 2017

மஹிந்த ராஜபக்ஷ‪ உலகெல்லாம் கடன்பட்டு இருந்த வேளையில் அவரது பதவிக் காலம் முடிவடைவதற்கு 2 வருடங்களுக்கு முன்பாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்தினார்.

SHARE
யாராலும் திருப்ப முடியாது என்றிருந்த பொருளாதாரத்தையும் அவரது ஆட்சியையும் நாட்டையும் ரணில் விக்கிரமசிங்ஹ மீட்டு இலங்கையிலுள்ள பிரச்சனைகளை சிறிது சிறிதாக மாற்றி இந்த இரண்டு வருடமாக பெரும் பொறுப்புடனே அவர் பணியாற்றுகின்றார்.
இந்த தேசிய அரசாங்கத்தில் பல கட்சிகள் ஒன்றிணைந்துதான் நாம் ஆட்சிசெய்து வருகின்றோம்.

என ஐக்கியதேசியக் கட்சியின் செயலாளரும், அரசாங்க தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாஸிம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் சனிக்கிழமை (23) மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்தியின் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வீட்டில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்…


எமது ஐக்கிய தேசிய கட்சி இருபது வருடங்களாக எதிர்க் கட்சியில் இருந்தாலும் இந்த கட்சிக்கு இருபது வருடமாக உழைத்தவர்களுக்கு இன்னும் நாம் சரியான முறையில் சில சமயங்களில் உதவியளிக்க முடியாமல் போயுள்ளது. 

அதேவேளை, நாம் தேசத்தைப் பற்றி சிந்தித்து செயலாற்றுவதால் பொறுமையாக இருந்திருக்கின்றோம்.

பிரதேச சபை, நகரசபை, மாகாணசபை போன்றவற்றில் தேர்தல் வைத்து அதில் நாம் ஆட்சியை கைப்பற்றுவோமானால் நாம் நினைத்திருப்பது போல் மக்களுக்கும், ஐதேக தொண்டர்களுக்கும் சில பிரச்சனைகளை தீர்த்து வைக்கமுடியும்.

மஹிந்த ராஜபக்ஷ‪விடம் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமும் நாடாளுமன்ற அதிகாரங்களும் இருந்தன, மாகாணசபை, நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் பலம் எல்லாம் அவர் வசம் இருந்தன. இவை எல்லாவற்றையும் வைத்துக்கொண்டுதான் அவர் ஆட்சி செய்தார். நாங்கள் இவைகளில் அரைவாசி இல்லாமல்தான் இன்று ஆட்சியை நடத்திக் கொண்டு செல்கின்றோம்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இவர்களுக்கு வாக்கு கிடைக்காது என்று கூட்டு எதிர்க் கட்சியினர் சொன்னரார்கள்  ஊரிலும் இப்படித்தான் வாக்கு எதுவும் கிடைக்காது என்றார்கள்.

ஆனால் நாங்கள் அதில் வெற்றி பெற்றோம் அதே போல் முழு இலங்கையிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதனை இந்த சந்தர்ப்பத்தில் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

இன்று இலங்கையில் பயமில்லாமல் சுவாசிக்க முடிகின்றது, நாங்கள் இலங்கையர் என்ற அடிப்படையில்  சிங்களவர் தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என்று பேதமில்லாது எல்லோரும் சம உரிமையுடன் வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்கிக் கொண்டு வருகின்றோம். இது எமக்குக் கிடைத்த பெரும் வெற்றி.
இங்கு இந்தக் கூட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வந்து கலந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கின்றது.

இலங்கையில் எந்த தேசிய கட்சியிலாவது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கின்றதா என்று நான் உங்களிடம் கேட்கின்றேன்,  எமது ஐக்கிய Nதிய கட்சியில்தான் முதலாவதாக அந்த செயலாளர் பதவியை ஒரு சிறுபான்மை இனத்தவருக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

நாம் ஜாதி பேதம் பார்ப்பதில்லை அனைவருக்கும் ஐக்கிய தேசிய கட்சியில் சந்தர்ப்பம் இருக்கின்றது.

முன்னைய காலத்தில் மட்டக்களப்பு  மாவட்டத்தில் ஐதேக வின் மூலம்தான் தமிழ், முஸ்லிம்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு அமைச்சுப் பதவிகளையும் வகித்தார்கள்.

இங்கு மட்டுமல்ல யாழ்ப்பாணத்திலும் அப்படித்தான். அந்த நிலை திரும்பவும் வரவேண்டும் என நாம் அவாக் கொள்கின்றோம்.

நாங்கள் இந்த அரசாங்கத்தை தேசிய அரசாங்கமாக அமைத்திருக்கின்றோம் இதில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.  ஆதலால் நாங்கள் மாத்திரமல்ல பல கட்சிகளுடன் சேர்ந்து வேலை செய்யவேண்டியுள்ளது.

சுதந்திரம் கிடைத்த பின்னர் மக்களின் பிரச்சனைகள் தேசத்தின் பிரச்சனைகளை சரியாக தீர்க்க முடியாமல் போனது.

இலங்கையில் தேசிய கட்சிகள் இரண்டு ஒன்று சேர்ந்து ஆட்சி செய்வது இதுதான் முதல் தடவை.

எமது தேசிய பிரச்சனையினை தீர்க்கக் கூடிய நல்ல சந்தர்ப்பம் இதுவாகும் இதனை நாம் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமது பகுதியிலுள்ள வீதியை புனரமைப்பது, பாலம் அமைப்பது, கொங்கிரீட் போடுவது, வேலைவாய்ப்பு அவையெல்லாம் தாமதமானாலும் காலங்கடந்தாலும் செய்யலாம், ஆனால் இந்த தேசிய பிரச்சினையினை தீர்த்து வைக்க வேண்டும்.
மீண்டுமொரு யுத்த நிலைமைக்கு நாம் சென்று விடக் கூடாது.

இங்கு யுத்தம் நடைபெற்ற பிரதேசம் என்பதை நான் அறிவேன் இங்கு பாடசாலைகள், வீதிகள், தொழில்வாய்ப்பு இவ்வாறான பல பிரச்சனைகள் உள்ளன.

இங்குள்ளவர்கள் தமிழராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் சிங்களவராக இருந்தாலும் அது எமக்கு ஒரு பிரச்சினை இல்லை,
பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கணேசமூர்த்தி  பிரதமரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மண்டூர் பாலத்தை அமைப்பதற்கென பிரதமர் 1600 மில்லியன் ரூபாவை ஒதிக்கியிருக்கின்றார்.

அதேபோல் இந்த தொகுதிக்கு 200 மில்லியன் ரூபா கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்காக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவது எம் முன்னாலுள்ள அடுத்த சவால்.

அது மிக முக்கியமான  தேவை ஒன்று, இன்னும் சில மாதங்களில் நாங்கள் அதுபற்றி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளோம்.

நாம் ஆட்சியேற்று இரண்டு வருடங்களாகின்ற தற்போதைய நிலையில் சகல தேவைகளையும் நிறைவேற்றிவிட முடியாது, 2020 ஆண்டளவில் உங்களின் சகல பிரச்சனைகளும் தீர்க்கப்படும் அப்படி தீர்க்காவிட்டால் எங்களை ஆட்சியிலிருந்து வெளியேற்றுங்கள்.” என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: