11 Sept 2017

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நவீன சுகாதார வசதிகளுடன் கூடிய கழிப்பறைகளை அமைக்க 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம்

SHARE
கிழக்கு மாகாணத்தில் கழிவறைகள் குறைபாடுள்ள பாடசாலைகளுக்கு நவீன சுகாதார வசதிகளைக் கொண்ட கழிப்பறைகளை நிர்மாணித்துக் கொள்வதற்கான ஒப்பந்தம் திங்கட்கிழமை 11.09.2017 கிழக்கு மாகாணக் கல்வியமைச்சில் கைச்சாத்திடப்பட்டதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தார்.
இதற்கென மத்திய கல்வியமைச்சினால்  23 கோடி 80 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் கழிப்பறை வசதிக் குறைபாடுள்ள, தெரிவு செய்யப்பட்ட 144 பாடசாலைகளில் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் நவீன கழிப்பறை வசதிகள் எற்படுத்திக் கொடுக்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் கழிப்பறை வசதிக் குறைபாடுள்ள பாடசாலைகள் அடையாளங்காணப்பட்டு அவற்றின் குறைபாடுகள் தீர்க்கப்படுவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அயராத முயற்சி மேற்கொண்டிருந்ததாகவும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

பாடசாலைகளில் கழிப்பறைகள் இன்மையால், அல்லது பாவனைக்கு உகந்த சுகாதார வசதிகளோடு மலசலகூடங்கள் இல்லாததால் பல மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதையே நிறுத்தி இடை விலகுகின்ற நிலைமையும் தமக்கு அறியக் கிடைத்ததுடன் இவ்வாறான நிதியொதுக்கீடுகள் மூலம்   அந்தக் குறைபாடுகள் தீர்க்கக் கிடைத்தமையை இட்டு தாம்  மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: