மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 17 வருடங்களாக வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தற்காலிக நிலையில் சுகாதார தொண்டர்கள் தங்களுக்கான நியமனங்களை வழங்க கோரி இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு புதிய பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்ற சுகாதார தொண்டர்கள் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாணசபை தமது நியமனம் தொடர்பில் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் தமக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.
1998ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுமார் 65 சுகாதார தொண்டர்களுக்கு இதுவரையில் எதுவித நியமனங்களும் வழங்கப்படாத நிலையில் தற்காலிக நிலையிலேயே கடமையாற்றிவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தமக்கு நியமனங்கள் வழங்கப்படும் என 2004ஆம்ஆண்டு மற்றும் 2005ஆம்ஆண்டுகளில் நேர்முகப்பரீட்சைகள் நடாத்தப்பட்டபோதும் இதுவரையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை.
2016ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபையினால் நேர்முகப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு 200க்கும் மேற்பட்ட சுகாதார தொண்டர்கள் புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அதிலும் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக சுகாதார தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
17வருடமாக சுகாதா தொண்டர்களாக கடமையாற்றுபவர்கள் அனைத்து தகுதிகளையும் கல்வித்தகைமைகளையும் கொண்டுள்ளபோதிலும் ஏன் இதுவரையில் தங்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லையெனவும் அவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
பல ஆண்டுகளாக யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்த காலங்களில் எதுவித கொடுப்பனவுகளும் இன்றி சேவை மனப்பான்மையுடன் கடமையாற்றிய தங்களை கிழக்கு மாகாணசபை புறக்கணிப்பதானது கவலைக்குரிய விடயம் எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த ஆர்ப்பாட்ட பிரதேசத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன்.சி.யோகேஸ்வரன் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் நியாயமான கோரிக்கையினை புஸ்ரீர்த்திசெய்ய கிழக்கு மாகாணசபை நடவடிக்கையெடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment