27 Aug 2017

மாநகர திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் மீண்டும் தீ

SHARE
மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் சனிக்கிழமை (26.08.2017) நண்பகலளவில் மீண்டும் பாரிய தீ மூண்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை 27.08.2017 வரை பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டிருந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (22.08.2017) அதிகாலை ஒரு மணியளவில் இந்த இடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விமானப்படையினர், பொலிஸார், மாநகர சபையினர் ஆகியோரின் உதவியுடன் மறுநாள் பிற்பகலளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாக மாநகர ஆணையாளர் வெள்ளக்குட்டி தவராஜா தெரிவித்தார்.

ஆயினும், குப்பை மேட்டில் ஊடுருவி ஆழமாகப் புகைந்து கொண்டிருந்த நெருப்பு தற்போது மீண்டும் எரிய ஆரம்பித்துள்ளது.

தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாசவேலை காரணமாகவே கடந்த செவ்வாய்க்கிழமை முதலாவது தீ பரவல் இடம்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

சுமார் 9 ஏக்கர் நிலப்பரப்புக் கொண்ட இந்நிலையத்தின் 5 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கும் திண்மக்கழிவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டு தரம்பிரிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, திருப்பெருந்துறைப் பகுதி மக்கள் கடந்த பல வருடங்களாக இங்குள்ள திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தை மக்கள் வாழும் பகுதிகளை விட்டு வேறு பொருத்தமான இடத்திற்கு அப்புறப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து வந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் இதனால் தாங்கள் துர்நாற்றம் உட்பட, சுவாச நோய்களுக்கும் பல்வேறு உபாதைகளுக்கும் சுற்றாடல் மாசுக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.






SHARE

Author: verified_user

0 Comments: