29 Aug 2017

கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சின் உயர் மட்டக்குழு மட்டக்களப்பு விஜயம் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்த ஹிஸ்புல்லாஹ்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரி மீனவ கிராமமொன்றை உருவாக்கல், மஞ்சத்தொடுவாயில மீன்பிடி படகுகளை திருத்தும் நிலையமொன்றை அமைத்தல் மற்றும் பூநொச்சிமுனையில் மீன்பிடி திணைக்களத்தின் உப அலுவலகமொன்றினை தாபித்தல் போன்ற விடயங்களை ஆராய்ந்து சாத்தியவள அறிக்கை தயார் செய்வதற்காக கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் உயர் மட்டக்குழு திங்கட்கிழமை (28)  மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது
கடற்றொழில் மற்றும் மீன்பித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, மட்டக்களப்பில் மாதிரி மீனவ கிராமமொன்றை தாபித்தல், மஞ்சத்தொடுவாய், பாலமுனை, காங்கேயனோடை, பூநொச்சிமுனை பிரதேசங்களில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அவர்களது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், மஞ்சத்தொடுவாய் வாவியில் மீன்பிடி மற்றும் அழ்கடல் மீன்பிடி படகுகளை திருத்துவதற்கான நிலையமொன்றை அமைத்தல் மற்றும் பூநொச்சிமுனையில் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள், வள்ளங்கள் பதிவதற்கான மீன்பிடி திணைக்களத்தினுடைய உப அலுவலகத்தை தாபித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைளை அமைச்சர் அமரவீரவிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் முன்வைத்திருந்தார்

பின்னர் இது சம்பந்தமான இரு தரப்பு கலந்துரையாடலும் இடம்பெற்றது. அதற்கமைய இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டு அதற்கான மதீப்பீட்டு அறிக்கை மற்றும் சாத்தியவள அறிக்கை என்பன தயார் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அமரவீர பணிப்புரை வழங்கியிருந்தார்

இதற்கமைய சாத்தியவள அறிக்கை தயாரிப்பதற்கு கள ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் உயர் மட்டக்குழு நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. இதில் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பாலித்த பெர்னாண்டோ உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.   

இவர்களை வரவேற்ற புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ், சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்று குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தேவைப்பாடு குறித்து விளக்கமளித்தார்

இராஜாங்க அமைச்சருடன் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்

காங்கேயனோடையில் மாதிரி மீனவ கிராமம் அமைப்பதற்கு ஒவ்வொரு மீனவ குடும்பங்களுக்கும் மலசல கூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தலா 30ஆயிரம் ரூபாவும், திருத்தப்படாத வீடுகளை திருத்தி அமைப்பதற்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதமும் வழங்க இதன்போது அக்குழு உடன்பட்டது. அதற்கமைய காங்கேயனோடை மீன்பிடிச் சங்க தலைவருக்கு கல்லடி மீன்பிடி திணைக்களத்தின் ஊடாக அதற்கான விண்ணப்பங்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது

அவ்வாறே, பாலமுனையில் கட்டப்பட்டு பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்ற மீனவர் கட்டிட நிர்மாணப் பணிகளை முழுமைப்படுத்துவதற்குத் தேவையான மேலதிக நிதியை உடனடியாக வழங்குவதற்குரிய ஏறற்பாடுகளை செய்வதாகவும், அதற்குரிய மதீப்பீட்டரிக்கையை கல்லடி மீன்பிடி திணைக்களத்தினுடைய தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உடனடியாக செய்து அமைச்சிற்கு அனுப்பி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அக்குழு பணிப்புரை வழங்கியது

அத்துடன், மஞ்சத்தொடுவாய் மற்றும் பூநொச்சிமுனை பிரதேசத்திற்கும் கள விஜயம் மேற்கொண்ட அக்குழுவினர், அங்கு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் கலந்தாலோசித்து சாதகமான முடிவினைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தனர்


SHARE

Author: verified_user

0 Comments: