27 Aug 2017

கலாச்சார சீரழிவுகளை அங்கீகரித்து பொறுப்புணர்ச்சியற்று வெறுமனே கை கைட்டிப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களின் தலைவர் எஸ். சிவயோகநாதன்.

SHARE
கலாச்சார சீரழிவுகளை அங்கீகரித்து பொறுப்புணர்ச்சியற்று வெறுமனே கை கைட்டிப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பான இணையத்தின் தலைவர் எஸ். சிவயோகநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - கருவேப்பங்கேணி விபுலானந்தாக் கல்லூரி முன் வாயிலில் கல்லூரி மாணவர்களும் பெற்றோரும் இணைந்து சனிக்கிழமை  நடாத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக சிவயோகநாதன் ஞாயிற்றுக்கிழமை 27.08.2017 ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும், கூறியதாவது.... அப்பாடசாலையில் ஏற்கெனவே ஆசிரியராக இருந்த வேளையில் பாடசாலையில் கல்வி பயின்ற மாணவி ஒருவர் அந்த  ஆசிரியரால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக, நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு மீண்டும் குறித்த பாடசாலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கடமை புரியலாம் என்று நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீதிமன்றக் கட்டளைக்குக் கட்டுப்பட்ட அதனை மதித்து வாழ்கின்ற சமூகமாக நாங்கள் இருக்கின்றோம். அதில் பொறுப்புணர்ச்சியற்று நடந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

அதேவேளை, மதிப்பும் மரியாதையுடனும் கூடிய சமூக அந்தஸ்தையும் ஆசிரியப் பெருந்தகைகள் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், இந்த உயர் விழுமியமான எதிர்பார்ப்புக்கு மாற்றமாக ஏமாற்றம் தரும் வகையில் ஒரு சில ஆசிரியர்களின் செயற்பாடுகள் அமைந்து விடுகின்றன. இதனால் அந்தப் பாடசாலை, அங்கே கற்பிக்கின்ற ஏனைய நற்பண்புகளுள்ள ஆசிரியர்கள், அந்தக் கிராமம் அந்த சமூகம் என அனைத்துத் தரப்பினருக்கும் அபகீர்த்தி ஏற்பட்டு விடுகின்றது.

இந்தக் கருவேப்பங்கேணிப் பாடசாலையில் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியரின் இடமாற்றத்திற்குப் பின்னர் பாடசாலை நிருவாகம் மற்றும் கிராம மக்களின் வினைத்திறனுள்ள செயற்பாடுகளினால் பாடசாலையின் கல்வி நிலை மேம்பட்டிருப்பதை நாம் அவதானிக்கின்றோம்.

எனவே, சீர்கேடுகளுக்குக் காரணமாக இருந்த முன்னாள் ஆசிரியரை மீண்டும் இங்கு கடமை புரிய அனுப்பாமல் வினைத்திறனுள்ள ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிக்கின்ற வேறொரு ஆசிரியரை நியமிக்குமாறே நாம் பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைவாக  வேண்டி நிற்கின்றோம்

அதேநேரத்தில், பிரதேச மக்களின் அவா என்னவென்பதையும் சீர்தூக்கிப் பார்த்து கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதையும் நாங்கள் பணிவுடன் முன் வைக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்ட அரசு சாரா நிறுவனங்களின் கூட்டமைப்பான இணையம், கல்விசார் மன்றம் ஒன்றை அமைத்து அதனூடாக மாவட்டத்தில் நிலவுகின்ற கல்வி முன்னேற்றத்துக் தடையாகவுள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக் தீர்வு காணும் நிகழ்ச்சித் திட்டத்தைச் செய்து வருகின்றோம்.

அந்த வகையில் கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் கருவேப்பங்கேணிப் பாடசாலையும் உள்வாங்கப்பட்டுள்ளது.

எனினும், இப்பாடசாலையில் ஏற்கெனவே இங்கு பணியாற்றிய வேளையில் மாடசாலை மாணவியொருவர் மீதான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிபர் மீண்டும் பாடசாலைக்கு அதிபராகக் கடமை புரிய வருவதை அறிந்து பிரதேச மக்கள் அதிருப்தியும், ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்த நிலையில் கவன ஈர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

இந்த விடயத்தைச் சீர்தூக்கிப் பார்த்து பிரதேச கல்வி கலாச்சார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாம் அனைத்தத் தரப்பினரையும் வேண்டி நிற்கின்றோம்” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: