1 Mar 2017

எந்தவொரு நாட்டிலும் அரசாங்கத்தால் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கிவிட முடியாது. கோட்டக் கல்விப் பணிப்பாளர் என். குணலிங்கம்

SHARE
எந்தவொரு நாட்டிலும் அரசாங்கத்தால் அனைத்துப்  பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கிவிட முடியாது.  இலகுவில் தொழில் பெற்றுக் கொள்ளக் கூடிய உயர்கல்வியை மாணவர்கள் தெரிவு செய்து கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு
கல்குடா கல்வி வலயத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் என். குணலிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்திலுள்ள கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில்  செவ்வாய்கிழமை 28.02.2017 இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் அவர் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது@
சமீப சில நாட்களாக மட்டக்களப்பு நகரில் பட்டதாரிகளால் ஒரு சத்தியாக்கிரகப் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பில் தொழில் வழங்கக் கோரி நிற்கும் சுமார் 1500 பட்டதாரிகளில் 1200 பேர் கலைப் பட்டதாரிகளாகத்தான் இருப்பார்கள் என நான் கருதுகின்றேன்.
வேலைவாய்ப்புத் துறையில் தற்போது கலைப் பட்டதாரிகளுக்கு இருக்கின்ற கேள்வி மிகவும் குறைவானது.

அந்த வகையிலே இவ்வாறான பட்டதாரிகள் ஆசிரியர்களாக அல்லது எழுது வினைஞர்களாக மாத்திரம்தான் செயற்பட முடியும் என்கின்ற நிலையிலே எங்களுடைய பட்டங்களும் படிப்பின் பொறுமதியும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.
அதற்காகத்தான் அரசாங்கம் கல்விக் கொள்கையிலே மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றது.

கல்வி கற்கும்போது பாடசாலை மாணவர்கள் கல்வியை ஒரு குறிக்கோளுடன் கற்க வேண்டும்.
இப்பொழுது கல்வியிலே நாங்கள் தெரிவு செய்யும் துறையினை தவறான முறையில் தெரிவு செய்து விடுகின்றோம்.

இதற்கு சரியான பாதையை ஆசிரியர்களும் பெற்றோர்களும் கல்வியியலாளர்களும் வழிகாட்ட வேண்டும்.

குறிப்பாக எமக்கு நான்கு பிரதான துறைகளாக கலை, விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் உயிரியல் ஆகியவையே இருந்தது.

இப்போது ஐந்தாவதாக தொழிநுட்பத்துறையை உள்வாங்கியுள்ளனர். அதிலும்  இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருக்கின்ற பல்வேறு கம்பனிகளிலே அதிகளவான பதவி வெற்றிடங்கள் உள்ளன. ஏனெனில், அப்பதவிகளுக்கு கலைப் பட்டதாரிகள் தெரிவுசெய்த பாடத் துறைகள் பொருத்தமானதாக இல்லை.

எனவேதான் நமது மாணவர்கள் தமது தற்போதுள்ள தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் கல்வித் துறையினை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், எந்தவொரு நாட்டிலும் அரசாங்கத்தால் முழுமையாக பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிவிட முடியாது.

இது அமெரிக்காவாக இருக்கலாம் ஏனைய அபிவிருத்தியடைந்த நாடாக இருக்கலாம் நிறை தொழில் மட்டம் என்பதை எதிர்பார்க்க முடியாது.
ஏறக்குறைய ஐந்து தொடக்கம் எட்டு வரையில்  வேலையின்மை வீதம் உலகின் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலே சாதாரணமானதொரு விடயமாக இருக்கின்றது.

இருப்பினும் நாங்கள் சிறப்பாகக் கற்றுக் கொண்ட அல்லது தெரிவு செய்த துறைகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்பினை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: