6 Mar 2017

கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது - அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

SHARE
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டத்தின் திட்டமிடல் பணிகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்  சனிக்கிழமை (04.03.2017) கல்முனை மாநகரசபையின் சபா மண்டபத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில்,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திட்டமிடல் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
இதன் பின்னர் மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, கல்முனை, சாய்ந்தமருது,சம்மாந்துறை போன்ற இடங்களை அமைச்சர்  ரவூப்  ஹக்கீம் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நேரில்  சென்று பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து தமிழ் மக்களுடனான கலந்துரையாடல் ஒன்று கல்முனை எஸ்.எல்.ஆர் ஹேட்டல் மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே  அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறுகையில்,

கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகள் பெற்றுத்தரப்படும். கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் போது தமிழ் பிரதேசங்களும் அபிவிருத்திசெய்யப்படும். பாரிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது தமிழ் தரப்போடு இணக்கப்பாட்டை பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்துவோம். வீணான வதந்திகளை பரப்பி தமிழ்-முஸ்லிம் உறவை சீர்குலைக்க எடுக்கப்படும் நடவடிக்கைளை முறியடிக்க வேண்டும். கல்முனை மாநகர சபை ஊடக முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தவிட்டார்.

கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர். கே.ஏகாம்பரம், மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி உட்பட மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: