13 Feb 2017

அதிகாரப் பகிர்வில் ஆகக் கூடிய அதிகாரங்களைப் பெற தமிழ் முஸ்லிம் சமூகங்கள் முயற்சிக்க வேண்டும். கிழக்கு முதலமைச்சர் செய்னுலாபதீன் நஸீர் அஹமட்

SHARE
உருவாக்கப்படவிருக்கின்ற புதிய அரசியலைப்பிலே தமிழ் முஸ்லிம் சமூகங்கள் கூட்டாக இணைந்து ஆகக் கூடிய அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள முயற்சித்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர்
செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூரில் திங்களன்று 13.02.2017 உள்ளுராட்சி மன்ற செயற் திட்டங்களின் அமுலாக்கம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு அவர் கருத்துத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்@ தமிழ் முஸ்லிம் மக்களினதும் சமூகத் தலைமைகளினதும் உறவு தொடர்ச்சியாக வலுப்படுத்தப்பட்டு எங்களுக்குள் ஒரு தீர்க்கமான உடன்பாடு எய்தப்பட வேண்டும் என்பதில் ஸ்ரீலமுகா தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களும் உறுதியாக உள்ளார்கள்.

அதற்கான முன்னெடுப்புக்கள் ஏற்கெனவே தொடங்கி விட்டன.
தமிழ் முஸ்லிம் சமூகங்கள் மனப் பூர்வமாக இணைந்தால் அதிகாரப் பகிர்விலே பெரும்பான்மை அரசாங்கத்திடமிருந்து ஆகக் கூடிய அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இரண்டு சிறுபான்மைச் சமூகங்களும் உடன்பாட்டோடு ஒத்திசைவாகக் குரல் கொடுத்து இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைந்து கொள்ள வேண்டும்.
இரண்டு சமூகங்களுக்குமிடையில் அதிக விட்டுக் கொடுப்புக்கள் தேவைப்படுகின்ற அதேவேளை இரு சமூகங்களினதும் கௌரவம் பாதிக்கப்படாத வகையில் பரஸ்பர புரிந்துணர்வும் உடன்பாடும் தேவை.

இன்னமும் பிளவுபட்ட சமூகங்களாக நாம் இருப்பது இந்த நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் அபாயம் இருப்பதால் இணக்கப்பாடு என்பது காலத்தின் தேவையாகவுள்ளது.

நீடித்து நிலைத்து நிற்கும் சமாதானமும் சகவாழ்வும் நமது இவ்விரு சமூகங்களினதும் தியாகங்களில் தங்கியுள்ளது” என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம், மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம், ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை ஆகியோரும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: