28 Feb 2017

ஏறாவூர் வர்த்தக நகர நெடுஞ்சாலை அகலமாக்கும் அபிவிருத்திப் பணிகள் ஜுன் மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பமாகும் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

SHARE
ஏறாவூர் வர்த்தக நகர நெடுஞ்சாலை அகலமாக்கும் அபிவிருத்திப் பணிகள் ஜுன் மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பமாகும் என செவ்வாய்க்கிழமை 28.02.2017 ஏறாவூரில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினரான அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகரப் பகுதியை அகலமாக்கும் அபிவிருத்தித் திட்டம் தொடர்பான விஷேட கலந்தாலோசனைக் கூட்டம் மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (28.02.2017) இடம்பெற்றது.

வர்த்தகர்களின் நலன் கருதி எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாள் வர்த்தகத்தைக் கருத்திற் கொண்டு நகர அபிவிருத்திக்காக கட்டிட நிர்மாணங்களை உடைக்கும் வேலைகள் ஜீன் இறுதி வாரத்திற்குப் பிற்போடுவது என்று வர்த்தகர்கள் இணங்கிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

நடுத்தெருவிலிருந்து இருமருங்கும் 11.5 மீற்றர் விரிவுடையதாக ஏறாவூர் நகர நெடுஞ்சாலை இருவழி வாகனத் தடங்கள், நடைபாதை, வாகனத் தரிப்புக்கான இடம், வடிகான் என்பனவற்றை உள்ளடக்கியதாக ஏறாவூர் நகர கடைத்தெரு அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலை அகலமாக்கும் வேலைத் திட்டத்திம் இடம்பெறவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைப் பொறியாளர் ரீ. பத்மராஜா தெரிவித்தார்.

சுமார் 18 மாத காலத்தில் இந்த நகர நெடுஞ்சாலை அபிவிருத்தி பூர்த்தி செய்யப்பட்டு விடும் என்றும் பத்மராஜா கூறினார்.
இதற்கென நகர அபிவிருத்தி நீர் விநியோக அமைச்சு 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நகர நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர சபைப் பிரிவுக்குள் 607 வர்த்தக நிலையங்கள், 347 குடிமனைகள், 187 வெற்றுக்  காணிகள் உள்ளடங்குகின்றன.

இவைகளின் கட்டிடங்கள், மற்றும் நிர்மாணங்கள் நகர நெடுஞ்சாலை அபிவிருத்திக்காக குறிக்கப்பட்ட அளவுகளில் உள்வாங்கப்படவுள்ளன.




SHARE

Author: verified_user

0 Comments: