17 Feb 2017

கிழக்கில் நிருவாகச் செலவுகளுக்கான கட்டு நிதி கிடைக்காததால் அம்பியூலன்ஸ் சேவைகள் உட்பட இதர சுகாதாரத்துறைச் செயற்பாடுகளும் முடங்கும் ஆபத்து பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிப்பு

SHARE
கடந்த டிசெம்பெர் மாதத்திலிருந்து கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் திணைக்களற்குரிய நிருவாக அலுவல்களுக்கான கட்டு நிதி கிடைக்காததால் நோயாளிகளை சுமந்து செல்லும் அம்பியூலன்ஸ் சேவைகள் உட்பட இன்னும் பல சுகாதார சேவைகளுக்குரிய
வாகனப் பாவனையும் ஸ்தம்பிதமடையும் நிலைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக நோயாளர்களை எடுத்துச் செல்லும் அம்பியூலன்ஸ் சேவைகளை மட்டுப்படுத்தக் கூடிய நிலை ஏற்படும் என்றும் அஞ்சப்படுகின்றது.
இது விடயமாக திங்களன்று 13.02.2017 கிழக்கு மாகாண முதலமைச்சரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத் தலைவருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் அவர்களிடம் ஏறாவூரில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

வாகனங்கள் குறிப்பிட்ட அளவு தூரம் பயணம் செய்ததும் அந்த வாகனங்களை “சேர்விஸ்” செய்ய வேண்டும், ஆனால் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல தரங்களையும் கொண்ட வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் அம்பியூலன்ஸ் வண்டிகள் அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட தூர அளவை விட அதிக தூரம் பயணித்து விட்டதால் அவை சேர்விஸ் இற்கு உட்படுத்தப்பட வேண்டியிருந்தும் நிதி இல்லாததால் அவை சேர்விஸ் இற்கு உட்படுத்தப்படவில்லை.

மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள பிராந்திய சுகாதாரத் திணைக்களத்திற்குச் சேரவேண்டிய  நிருவாகச் செலவுகளுக்கான கட்டு நிதி ஒதுக்கீடு முடங்கிப் போயுள்ளதால் அம்பியூலன்ஸ் உட்பட நிருவாக மற்றும் சுகாதார சேவைச் செயற்பாட்டிலுள்ள வாகனங்களை சேர்விஸ் செய்ய முடியவில்லை என்று பிராந்திய சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்கள் நேரும் என்பதாலும் சட்டவிரோதம் என்பதாலும் சேர்விஸ் இற்கு உட்படுத்தாத அம்பியூலன்ஸ் மற்றுமுள்ள வாகனங்களை செலுத்துவதற்கு அவற்றின் சாரதிகள் அஞ்சுவதாகவும் வைத்தியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதனால் சுகாதாரத் திணைக்கள சேவைகளில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்களும், வைத்திய அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சகல வைத்தியசாலைகளிலும் நோயாளர் சேவைக்காக 36 அம்பியூலன்ஸ் வண்டிகள் உள்ளன.
மேலும், சுகாதார வைத்திய அதிகாரி சேவை, மற்றும் சுகாதார சேவைகளுக்காக முச்சக்கரவண்டி உட்பட 22 வாகனங்களும், நிருவாக அலுவல்களுக்காக 39 வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன.

நிதி விடுவிக்கப்படாமல் நிதி முடக்கம் நீடிக்குமானால் அத்தியாவசிய அம்பியூலன்ஸ் சேவைகள் உட்பட மற்றுமுள்ள சுகாதார சேவைகளும் முடங்கிப் போகக் கூடிய ஆபத்து இருப்பதாக வைத்திய அதிகாரிகளும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: