13 Feb 2017

நல்லாட்சியின் நகர்வு நல்லதாக இல்லை நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்

SHARE
நல்லாட்சியின் நகர்வு நல்லதாக இல்லை என மட்டக்களப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஞாயிறன்று 12.02.2017 இடம்பெற்றது.

அங்கு தொடர்து உரையாற்றிய வியாழேந்திரன்.

ஜனவரி மாதம் 31ஆம் திகதியிலிருந்து தெருவோரத்திலே குளிரிலும் வெயிலிலும் வேதனையுடன் தமது காணிகளை விடுவிக்ககச் கோரி அறவழிப் போராட்டத்தை முல்லைத்தீவு மக்கள் நடத்தி வருகின்றனர்.

கேப்பாப்பிலவு மக்கள் இறுதி யுத்தத்திலே 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை சென்று மிகப் பெரிய பாதிப்புக்களையும் இழப்புக்களையும் சந்தித்து இப்பொழுது பெருந்துயரோடு வீதியோரத்தில் வந்து தமது துன்ப துயரத்திற்கு முடிவு வேண்டித் தவம் கிடக்கின்றார்கள்.

செட்டிக்குளம் முகாம் தொடக்கம் இன்று வரை அவர்கள் வேதனைகளைச் சுமந்து கொண்டுதான் காலங்க கழிக்கின்றார்கள்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மீள் குடியேற்றம் என்ற பெயரிலே அவர்கள் குடியேற்றப்பட்டாலும் அவர்களுக்கான வசதி வாய்ப்புக்கள் அங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்டவில்லை.

நல்லாட்சியிலே தமது நிலபுலன்கள் மீளக் கிடைக்கும் என்கின்ற பாரிய எதிர்பார்ப்பு அவர்களுக்கிருந்தது.

ஆனால் நல்லாட்சி கடந்து மூன்று வருடங்கள் கழிந்து விட்ட போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரைத் தீர்வில்லை.

ஜனாதிபதியவர்கள் வரை கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினை எத்தி வைக்;கப்பட்டிருந்தாலும் இதுவரை உரிய நடவடிக்கைகளை நல்லாட்சியின் ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் அரசாங்கமும் எடுக்காதது கவலையளிக்கின்றது.
விமானப்படைக்கு கையகப் படுத்தப்பட்டிருக்கும் 534 ஏக்கர் பொதுமக்களின் காணி விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகப் போராடுகின்றோம்.

சூரபுரத்தில் 59 குடும்பங்களினுடைய காணிகள், தினக்குடியிருப்பில் 84 குடும்பங்களினுடைய காணிகள், கேப்பாப்பிலவில் 145 குடும்பங்களினுடைய காணிகள் இவ்வாறு பொதுமக்களின் காணிகள் விமானப்படையினரால் கையப்படுத்தப்பட்டிருக்கனின்றன.

அங்கு போராட்டம் நடத்தும் வயோதிபர் சிறுவர், தாய்மாருக்காக ஆதரவு தெரிவிக்கும் போராட்டத்தை கிழக்கிலுள்ள நாங்களும் முன்னெடுத்துள்ளோம்.
நல்லாட்சி அரசு இந்தப் பிரச்சினைக்கு காலத்தை இழுத்தடிக்காமல் நல்ல தீர்வைத் தரவேண்டும்.

பால்குடிக்கும் பச்சிளம் குழந்தைகளோடு பனியிலும் வெயிலிலும் படுத்துறங்கும் தாய்மாரின் துயரங்களை இந்த நல்லாட்சி அரசு ஏறெடுத்துப் பார்க்க வேண்டும்.
குடிமக்களை தெருவில் பதைபதைக்க வைப்பதா நல்லாட்சயின் நகர்வு? மக்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்குவதுதானா நல்லாட்சியின் நகர்வு ? இது பற்றி ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

வடக்கு தமிழ் மக்களின் துயரம் நிறைந்த போராட்டத்திற்கு தென்னிலங்கiயிலுள்ள சிங்கள மனிதாபிமானிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள் என்பது ஒரு நிம்மதி தரும் செய்தி. தமிழர் சிங்களவர் முஸ்லிம் என்ற பாகுபாடில்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டுப் போராடுவதில் நாம் ஒன்றிணைந்துள்ளோம்.” என்றார்.






SHARE

Author: verified_user

0 Comments: