26 Feb 2017

நல்லாட்சி அரசில் ஸ்திரத் தன்மை இல்லை என்பதை நடப்பு நிகழ்வுகள் சாட்சி பகர்கின்றன. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ்

SHARE
நல்லாட்சி அரசில் ஸ்திரத் தன்மை இல்லை என்பதை நடப்பு நிகழ்வுகள் சாட்சி பகர்கின்றன. அதனாலேயே மக்கள் மீண்டும் அமைதியற்ற அச்சம் நிறைந்த சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார்கள்
என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தெரிவித்தார்.

சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (26.02.2017) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது@
எங்களுடைய நாட்டிலே ஒரு நிலையான ஆட்சியும் சுமுகமான நீதியும் யதார்த்த பூர்வமாக மக்கள் வாழக் கூடிய நிலையும் உருவாகும் என்ற எதிர்பார்ப்புடன்தான் நாம் காத்திருந்தோம்.

ஆனால், நாட்டிலே அரசியல் ஸ்திரத் தன்மை இல்லை என்பதை நடப்பு நிகழ்வுகள் சாட்சி பகர்கின்றன.

நாடு மீண்டும் குழப்ப நிலைகளுக்குச் செல்லக் கூடிய அச்சுறுத்தல் அபாயம் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றது.

சமீப கிட்டிய காலப்பகுதியில் மட்டக்களப்பில் 4 அரச அதிகாரிகள் தாக்கப்பட்டிருக்கின்றார்கள் அதில் மூவர் மரணித்திருக்கின்றார்கள்.
காணிப் பிரச்சினை உக்கிரமடைந்து கொண்டு வருவதனால் இந்த நிலைமை ஏற்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் காணி அபகரிப்பும் காணிகளுக்கு அடாத்தாக உரிமை கோருவதும் அதிகாரிகள் தலையிட முடியாத நிலையும் இருந்து வருகின்றது.

நாங்கள் சிவில் சமூகமாக, அரச சார்பற்ற நிறுவனங்களாக. மக்கள் குழுக்களாக அவரவருடைய காணி உரித்தைக் கோரி நிற்கின்ற வேளையிலே அவை நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பும் ஏமாற்று வேலைகளுமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நாட்டில் வாழும் அனைவரும் நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையில் இருந்து அரசாங்கம்இந்தக் காணிப் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்து வைக்காமல் பக்கச் சார்பாக செயற்பட்டு வருகின்றது” என்றார்.
வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கருணா அம்மான் தலைமையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் (11.02.2017) ஆரம்பிக்கப்பட்டதே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் புதிய கட்சியாகும்.

வடகிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலும் கணவனை இழந்துள்ள பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டினை மேற்கொள்ளும் வகையிலும், இக்கட்சி செயற்படவுள்ள அதேவேளை, வடகிழக்கில் அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடவுள்ளதாகவும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் தெரிவித்திருந்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: