ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவினால் பராமரிக்கப்படும் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் நிருவாகத்திலுள்ள பல கிராமங்களில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக
சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
திங்களன்று 13.02.2017 ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கூறிய அவர்@ மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் அதிகளவான டெங்கு நோயாளர்களைக் கொண்ட பிரிவாக ஏறாவூர்ப்பற்றிலுள்ள சில கிராமங்கள் காணப்படுகின்றன.
ஹிஸ்புல்லாஹ் கிராமம், மீராகேணி, மிச்நகர் உட்பட இன்னும் அவற்றை அண்டியுள்ள சில கிராமங்களில் இந்த டெங்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது.
ஏறாவூரில் கடந்த செப்டெம்பெர் மாதம் வரை 19 பேராக இருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஜனவரியாகும்போது 74 ஆக அதிகரித்திருப்பது குறித்து அனைத்துத் தரப்பினரும் எச்சரிக்கையுடன் விழிப்படைய வேண்டும்.
நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களாக பாழடைந்த கிணறுகளும், நிலத்தடி நீர்க் குழாய்களுமே இருப்பதை நாம் பரிசோதனையின்போது அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
கிணறுகளையும் வைத்துக் கொண்டு சிலர் நிறுவனங்களினால் இலவசமாக செய்து கொடுக்கப்படும் நிலத்தடி நீர்க்குழாய்களையும் தமது வீடுகளில் பொருத்தியுள்ளனர். மேலதிகமாக குழாய் நீர் விநியோகத்தையும் பெற்றுள்ளனர்.
அதனால், தாங்கள் பாரம்பரியமாகப் பாவித்து வந்த கிணறுகளைப் பராமரிப்பின்றி விடுவதனால் நுளம்புகள் பெருகுமிடங்களாக கிணறுகளும் நிலத்தடி நீர்க் குழாய்களும் மாறிவிட்டிருக்கின்றன.
நுளம்புப் பெருக்கத்தை இல்லாதொழிப்பதற்காக கிணறுகளுக்கு வலை, கிணற்று நீருக்குள் நுளம்புக் குடம்பிகளை உண்ணக்கூடிய மீன்கள் மற்றும் நுளம்புக் குடம்பிகளை அழிக்க வல்ல ஒரு வகைத் தூள் என்பனவற்றைப் பயன்படுத்துகின்றோம்.
எனினும், இந்த வியடத்தின்; பாரதூரத் தன்மை குறித்து இன்னமும் பொதுமக்கள் அறியாதவர்களாக அக்கறையற்று இருக்கின்றார்கள்”என்றார்.
இந்த விடயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பாழடைந்து நுளம்புகள் உற்பத்தியாவதற்குத் தோதாக இருக்கும் கிணறுகளை அடையாளம் கண்டு அவற்றை நிர்மூலமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அடுத்தவாரம் ஏறாவூர்ப் பற்றிலுள்ள சகல பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து முழுமையான டெங்கு ஒழிப்பு சிரமதானம் ஒன்றைச் செய்து முடிக்குமாறும் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.
பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத் தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், ஸ்ரீலமுகா மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் உட்பட கூட்டுத்தாபன மற்றும் திணைக்களத் தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment