ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் காணியற்று வாழ்வதற்கு சிரமப்படும் 2500 மேற்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக காணிகள் வழங்கப்பட வேண்டும்
மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்து.
ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் காணியற்று வாழ்வதற்கு சிரமப்படும் 2500 குடும்பங்களுக்கு உடனடியாக காணிகள் வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திங்கட்கிழமை (13.02.2017) ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத் தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், ஸ்ரீலமுகா மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் உட்பட கூட்டுத்தாபன மற்றும் திணைக்களத் தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் 2017ஆம் ஆண்டில் அமுலாக்கப்படுகின்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் பற்றி ஆராயப்பட்டபொழுது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சுபைர்@ ஏறாவூர் நகர பிரதேசத்தில் வாழும் மக்கள் தாம் குடியிருக்க காணி இல்லாததன் காரணமாக மிகவும் சிரமத்துடன் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் நிலங்களிலும் குடிசைகள் அமைத்து சிரமத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
சுமார் 2500 இற்கு மேற்பட்ட குடும்பத்தவர்கள் தங்களுக்கு காணி தேவை என ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் விண்ணப்பித்திருக்கின்றார்கள்.
ஆயினும், அவர்களுக்கு காணி கிடைப்பதென்பது ஒரு கனவாகவே இருந்து வருகின்றது.
இது ஒரு சமூகப் பிரச்சினையாகவும் மனிதாபிமான நெருக்கடியாகவும் உருவெடுத்துள்ளது. அத்துடன் சுகாதார ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் நெருக்கடியை இங்கு வாழும் காணியற்ற மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுடன் இணைந்ததாக உள்ள ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் போதியளவு காணிகள் உள்ள அதேவேளை அருகில் வாழும் இந்த மக்கள் காணியற்றவர்களாக அந்தரிக்க விடப்பட்டிருப்பது ஒரு மனிதாபிமான நெருக்கடியாகவும் பார்க்கப்பட வேண்டியுள்ளது.
எனவே, இது குறித்து உடனடியாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஜனாதிபதி, பிரதம மந்திரிக்கும் அறிவிக்கும் வகையில் உடனடியாக காணி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 Comments:
Post a Comment