4 Dec 2016

நடுவழியில் திருப்பி விடப்பட்டதால் நடையைக் கட்டினர் ஞானசாரர் குழுவினர்

SHARE
கோலாகல ஏற்பாடுகளுடன் தொண்டர்கள் சகிதம் மட்டக்களப்பு நோக்கிப் புறப்பட்ட ஞானசாரர் குழுவினர் மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையில் படையினர் மற்றும் பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டதால் தாம் புறப்பட்ட இடத்துக்கே நடையைக் கட்டியுள்ளனர்.
பொதுபலசேனா, ராவண பலய உள்ளிட்ட இன்னும் பல பேரின மதவாத அமைப்புக்கள் இணைந்து கலகொடத்தே ஞானசார தேரர் தலையில் சனிக்கிழமையன்று மட்டக்களப்பு நோக்கி பயணித்த பொழுது ரிதிதென்ன பகுதியில் வைத்து மட்டக்களப்பு எல்லைக்குள் பிரவேசிக்க முடியாதவாறு தடுக்கப்பட்டனர்.

பேரணி மட்டக்களப்பு – பொலநறுவை எல்லைப் பிரதேசமான ரிதிதென்ன பகுதியில் பொலிசாரினால் வழிமறித்து இடைநிறுத்தப்பட்டதை அடுத்து அவ்விடத்தில் பதற்றநிலை நிலவியது.

இதனால் அவர்கள் அவ்விடத்தில் வீதியினை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். புகையிரதத்தையும் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து சனிக்கிழமை மாலை பொலிஸாரின் தடைகளை உடைத்துக் கொண்டு  மட்டக்களப்பு  நோக்கி தமது பயணத்தினை கால்நடையாக மேற்கொள்ள ஆயத்தமானபோது படையினரும் பொலிஸாருக்கு உதவியாக இணைந்து கொண்டு கலகக் குழுவினரைத் தடுத்து நிறுத்தினர்.

இதேவேளை நேரம் இருள் சூழ்ந்த கொண்டிருந்த காரணத்தினால் புணானை ஸ்ரீ பஞ்சமா விஹாரையில் சனிக்கிழமை இரவு தங்கியிருந்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

பொலிஸாருக்கும் ஞானசாரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினையடுத்து ஞாயிறு அதிகாலை வேளையில் மட்டக்களப்புக்கான தமது பயணத்தை முடிவுறுத்தி விட்டு தாம் வந்த வழியே திரும்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் போக்குவரத்து உட்பட இயல்புநிலை வழமைக்குத் திரும்பியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞானசாரரின் ஆர்ப்பாட்டத்துக்கான முஸ்தீபுகள் பற்றி ஏற்கெனவே புலனாய்வின்மூலம் அறிந்து கொண்ட பொலிஸார் வெறுப்புணர்வைத் தூண்டும் சட்டரீதியற்ற ஓன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவொன்றை வழங்குமாறு கரடியணாறு பொலிஸார் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றுக்கு மனுவொன்றை சமர்ப்பித்திருந்தனர்.

அதனை ஏற்றுக் கொண்ட ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் வெறுப்புணர்வைத் தூண்டும் ஆர்ப்பாட்டங்களையும்  ஒன்று கூடல்களையும் தடுக்கும் தடை உத்தரவினை வழங்கியிருந்தது.










SHARE

Author: verified_user

0 Comments: