7 Dec 2016

இனி இந்த நாட்டில் எந்த சமூகத்தினருக்கும் இழப்புக்கள் ஏற்பட்டுவிடக் கூடாது பொலொன்னறுவை மஹாபோதி விஹாராதிபதி எல்.தெரானந்த தேரர்

SHARE
நமது நாட்டின் வரலாற்றில் இதுவரை நடந்த அழிவுகள், இழப்புக்கள் இனி இந்த நாட்டில் எந்த சமூகத்தினருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என பொலன்னறுவை
மஹாபோதி விகாரையின் விகாராதிபதி எல்.தெரானந்த தேரர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் செயற்படும் சர்வமதக் குழுக்களின் பிரதிநிதிகளை கிறீன் கார்டன் மண்டபத்தில் புதன்கிழமை சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதப் பெரியார்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் 

ஒருவர் மற்றவரின் இரத்தத்தைத் ஓட்டுவது, அழிவுகளை ஏற்படுத்துவது, அநியாயங்களைப் புரிவது எல்லாம் இனிமேல் நமது வரலாற்றில் இடம்பெறக் கூடாது என்பதால் அந்த நல்ல மகோன்னத பணிக்காக தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் ஆகிய நாமெல்லோரும் சேர்ந்து பணி செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

யுத்தத்திற்குப் பின்னர் நாட்டின் வடக்கு கிழக்கில் பௌதீக ரீதியான அபிவிருத்திகள் இடம்பெற்றிருப்பதை நாம் நேரில் காணக்கிடைக்கின்றது.
யுத்தத்திற்குப் பின்னர் நான் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, புத்தளம், கற்பிட்டி போன்ற பல்வேறு பிரதேசங்களுக்கு; விஜயம் செய்திருக்கின்றேன். அந்தப் பிரதேசங்களில் பௌதீக மாற்றங்களை அபிவிருத்தி செய்திருக்கின்றார்கள்.
ஆனால், துரதிருஷ்ட வசமாக மக்களின் மனங்களில் உண்மையான அமைதியை ஏற்படுத்த நாம் தவறி விட்டிருக்கின்றோம்.

எனவே, இந்த விடயத்தில் நாம் தோல்வியடைந்து விடாமல் துரிதமாகச் செயற்பட்டு இனங்களுக்கிடையில் உள்ளார்ந்த, உயிரோட்டமான அமைதியை ஏற்படுத்த வேண்டும். இந்தப் பொறுப்பு அரசாங்கம் உட்பட நம் அனைவருக்கும் உண்டு.
வெறுமனே சமாதானத்தை மட்டும் பேசி விட்டு செயற்பாடு இல்லாமல் இருந்தால் உண்மையான சமாதானத்தை அடைய முடியாது. இதயங்களைத் திறக்க வேண்டும், சிந்தித்துணர வேண்டும், செயற்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் வேதனைகளை உணர்ந்து, உய்த்தறிந்து பரிகாரம் வழங்க வேண்டும்.

இந்தப் பெரும் பொறுப்பை எவரும் இலேசாக தட்டிக் கழிக்க முடியாது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பௌதீக ரீதியிலான உதவிகளை வழங்குவது நமது கடமை என்பதை அரசாங்கம் உட்பட அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பிலே சுனாமி அழிவு ஏற்பட்ட போது அருகிலுள்ள பெலன்னறுவை மாவட்டத்திற்கு ஓடி வந்து அடைக்கலம் தேடிக் கொண்ட சுமார் 500 தமிழ் முஸ்லிம் மக்களுக்கு நாம் அபயக் கரம் நீட்டி, ஆறுதலளித்து சிறிது காலம் பராமரித்து அவர்களை சிறப்பாக தமது பழைய இடங்களுக்கு மீளத் திரும்ப உதவினோம்.

இதில் இன மத பேதம் நாம் பார்க்கவில்லை. அதேபோன்றுதான் கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த சமூகத்தவர் என்று பார்க்கவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு உதவுவதுதான் அவசியமும் அவசரமும் ஆகும்.
இதை இந்த நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரெத்தின தேரர் கடந்த பல வருடங்களாக மட்டக்களப்பிலே இருந்து கொண்டு இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளிலும், அரச அதிகாரிகளை அதட்டும் நடவடிக்கைகளிலும், ஈடுபட்டுவரும் இந்நிலையில் பொலநறுவையிலீருந்து மட்டக்களப்பக்கு வருகை தந்த அதே பௌத்த மதத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் சமாதானத்தை விரும்பும் கருத்துக்களைத் தெரிவித்ததனால் அவர் அவ்விடத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.




SHARE

Author: verified_user

0 Comments: