27 Nov 2016

ஏறாவூர் புகையிரத நிலையத்தின் பயணிகள் மேடை அமைப்புப் பணிகள் மாதக்கணக்காக மந்த கதியில் பயணிகள் சிரமம்

SHARE
மட்டக்களப்புக்கு அடுத்த பெரிய புகையிரத நிலையமாக உள்ள ஏறாவூர் புகையிரத நிலைய பயணிகள் மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்ட போதிலும் இன்னமும் அமைப்பு வேலைகள் நிறைவுறாமல் அரை குறையாக விடப்பட்டுள்ளதால் தாம் அதிக சிரமங்களை எதிர்நோக்குவதாக புகையிரதப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

தற்சமயம் மழை காலம் ஆரம்பித்துள்ளதால் மேடை அமைப்பு வேலைகளுக்காக கிளறி விடப்பட்டு கொட்டப்பட்ட கிறவல் மண் மழை நீரோடு கலந்து சேறும் சகதியுமாகியுள்ளது.

மேலும் பயணிகள் மேடைக்கு கொட்டப்பட்டுள்ள மண் சமப்படுத்தப்படாததால் பயணிகள் மேடை பள்ளமும் சேறும் நிறைந்து காணப்படுவதோடு இதனால் புகையிரதத்தில் ஏறும் அல்லது இறங்கும் பயணிகள் வழுக்கி விழுந்து காயம்படவோ அல்லது உயிராபத்தை எதிர்நோக்கவோ வேண்டி வரும் எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் புகையிரத நிலையத்தைப் பயன்படுத்தி புகையிரதத்தில் ஏறும் அல்லது இறங்கும் பயணிகள் சேற்றுக்குள் கால் வைக்க வேண்டியுள்ளதாகவும் பயணிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் இந்த பயணிகள் மேடை அமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் பயணிகள் இன்னமும் அது ஏன் நிறைவு செய்யப்படவில்லை எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த வருட நிதி ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் யாவும்  இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்கின்ற நிபந்தனை இருந்த போதும் இந்த வேலைகள் அரைகுறையாக அலங்கோலமாக விடப்பட்டுள்ளது குறித்த அதிருப்தியையும் புகையிரதப் பயணிகள் வெளியிடுகின்றனர். 

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகையிரதப் பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.








SHARE

Author: verified_user

0 Comments: