27 Nov 2016

கிழக்கு மாகாண தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேறுமா??

SHARE
கிழக்கில் மட்டக்களப்பில் தற்போது தமிழர்களின் பூர்வீகக் கிராமங்கள் சிங்களவர்களால் கபளிகரம் செய்யப்பட்டு வருகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம்தான். இருந்தாலும் இது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பாரதூரமான பிரச்சினைகளாக
சென்றுகொண்டிருக்கின்றது. மட்டக்களப்பின் எல்லைக்கிராமங்களான கெவுளியாமடு, புளுக்குனாவை, கறுவாச்சோலை, மயிலத்தனம் மற்றும் மாதவன்ன போன்ற தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களில் சிங்களவர்கள் அத்துமீறி குடியேறுகின்றனர்.   விவசாய நிலங்களில் சேளைப்பயிர்செய்கை மற்றும் நெற்பயிர்ச்செய்கை செய்வதாக கூறி இவ்வாறு பெரும்பாண்மை இனத்தவர்கள் குடியேறுகின்றனர். 

அதுமட்டுமல்லாமல் கடந்த 16.11.2016ம் திகதி ஏறாவூர்ப்பற்று பங்குடாவெளியில் தனியார் காணி ஒன்றினுள் அத்துமீறி புகுந்து இக்காணியினுள் முன்னர் பௌத்த விகாரைகள் இருந்துள்ளதாக கூறி அக்காணியினுள் அரசமரம் இருந்துள்ளமையினால் இங்கே விகாரை ஒன்றினை கட்டுவதற்கு முனைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதே போன்று அடாத்தாக அம்பாறை இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒரு மாத காலத்தினுள் இடம்பெற்றவை. இது போன்ற பல சம்பவங்கள் பல நடந்தேறியுள்ளன.  

இவையனைத்தும் ஒருபுறம் இருக்க மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்படுமாக இருந்தால் இவற்றிக்கான தீர்வுகளை சுயமாகவே பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளை தவிந்த ஏனைய மாகாணங்களின் அதிகாரக்குறைப்பு தொடர்பாக அலட்டிக்கொள்ளப் போவதில்லை. காரணம் அகப்பை பிடிக்கின்ற கை எல்லாமே ஒன்றுதான், எப்போதும் உணவு கிடைக்கும் என்கின்ற நிலையில்தான் ஏனைய மாகாண சபைகள் உள்ளன. தமிழர்களின் குடியேற்றங்கள் ஒருபோதும் சிங்களப்பகுதியை நோக்கி இடம்பெறமாட்டாது. அதே போன்று தமிழர்களின் வழிபாட்டுத்தலங்கள் எப்போதும் சிங்களப்பகுதிகளில் அமையப்பெறாது என்பதை அவர்கள் நன்குணர்ந்தவர்களாக செயற்படுகின்றார்கள். இவற்றுக்கு எதிராகவே இன்று அனைத்தும் சிஙகளவர்களால் நாளுக்கு நாள் தமிழர்கள்தாம் காணிகளினை அபகரிப்பு செய்யப்படுகின்றது. 

தமிழர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த நல்லாட்சியிலும் இவ்வாறான தமிழர் காணிகள் அபகரிப்பு, தமிழர் காணிகளில் அடாத்தாக புத்தர் சிலைகளும், பௌத்த சின்னங்களும் தோற்றம் பெறுவதுதான் தமிழினத்தின் சோக வரலாறு. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்நிலை தொடர்கதைதானா? என அங்கலாய்க்கின்றனர் தமிழர். 

நல்லாட்சி அரசாங்கத்தில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்து இரண்டு அமைச்சுக்களை பெற்றுள்ளதால் இன்று கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு குரல் இழந்திருப்பதுடன் தமிழ் மக்களின் வாக்குகள் அனைத்தும் முஸ்லிம் காங்கிரசிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண தமிழர்களின் போராட்ட உணர்வுகள் ஒருபோதும் கிழக்கு மாகாண சபையூடாக வெளிப்படப்போவதில்லை. புதிய அரசியலமைப்பு யாப்பினை எதிர்பார்த்து அதில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் எதிர்கட்சியில் உள்ள தமிழினத்தின் தமிழ் தலைமைகள் அரசாங்கத்தை விமர்சிப்பதில் இருந்து தடம்மாறியுள்ளது.  ஆனால் அவ் அரசியலமைப்பு சாசனத்தில் தமிழர்களுக்கு என்ன உள்ளது என்பது கூட தெரியாமல் கூட்டமைப்பு இன்று அரசுடன் இணக்கப்பாட்டு அரசியல் நடாத்திக் கொண்டிருக்கின்றது. ஏமாற்றப்படும் தமிழினம் இந்த நல்லாட்சியிலும் ஏமாறமல் இருக்க அனைலரும் ஒன்றிணைய தேவையாகவுள்ளது. சிறுபாண்மையினத்தவர்கள் ஒன்றுசேர்வது இன்றைய காலத்தின்தேவையாகவுள்ளது.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதற்றநிலையினை ஏற்படுத்தி கொண்டிருக்கும் அத்துமீறிய குடியேற்றங்களுக்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைக்கலாம்? என்கின்ற வினாவுக்கு எம்முள்ளே பதிலை வைத்துவிட்டு அலைந்து திரிகின்றோம். மட்டக்களப்பின் தற்போது பிரச்சினைகளுக்குரிய கெவுளியாமடு, கறுவாச்சோலை, மற்றும் மங்களராம, கச்சக்கொடி சுவாமிமலை போன்ற பிரதேசங்களில் முன்னைய காலங்களில் தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான வசதிகள் மற்றும் வளங்கள் இன்மையின் காரணமாக அவ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கான போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், வீட்டு வசதிகள் மற்றும் குடிநீர்ப்பிரச்சினைகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்துவிட்டு அவர்களை அங்கே மீளக்குடியமர்த்த கூடிய நிலை மாறுமாக இருந்தால் இந்த காணி கபளீகரம் இடம்பெற வாய்பிருக்காது. 

கறுவாச்சோலையில் 1983ம் ஆண்டு 105 குடும்பங்கள் வாழ்ந்த இந்தக்கிராமத்தில் தற்போது ஒரேஒரு குடும்பம் வாழ்ந்து வருகின்றது. அருகில் உள்ள கெவுளியாமடு கிராமத்தில் 345 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அங்கே இரண்டு விகாரைகள் அமைக்கப்ட்டுள்ளன. புளுக்குனாவையில் ரஜமஹா விகாரையும் அமைக்கப்பட்டு அதனருகே சில வரலாற்றுச் சுவடுகள் பாதுகாக்கப்படுவதுடன் மட்டுமல்லாமல் அந்த இடங்களுக்கு சிங்கள மக்கள் இலகுவாக வந்து பார்வையிட்டு செல்வதற்கான பாதைகள் காப்பெற் வீதிகளாக செப்பனிடப்பட்டு அவர்களுக்கான வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள்.  அதே போன்று கச்சக்கொடி சுவாமி மலையில் 65 தமிழ் குடும்பங்கள் வாழ்கின்றன. எதிர்வருகின்ற காலங்களில் இந்த மக்களும் இடம்பெயர்வதற்கான செயற்பாடுகள் தென்படுகின்றன. இந்தக் கிராமங்கள் அனைத்தும் முற்றாக அடிப்படை வசதிகள் இன்றி காட்டுயானைகள் மற்றும் இயற்கையின் சீற்றம் என்பவற்றுக்கு முகங்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். 

கடந்த 2015ம் ஆண்டில் தமிழர்கள் மூலம் ஏற்பட்ட நல்லாட்சியின் பிரதிபலனாக கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்து தற்பொழுது இருபது மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தமிழர்கள் பெற்றுக்கொண்டவை என்ன என்பது மக்களிடையே பாரிய கேள்வியாகவுள்ளது. கிழக்கு மாகாண சபையில் இலங்கை முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து இரண்டு அமைச்சுக்களை பெற்றுள்ளது. அதிலே உள்ள அமைச்சில் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சும் உள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாணம் குறிப்பாக மட்டக்களப்பிலே காணி அபகரிப்பு மாபெரும் சவாலாக உள்ளது. தமிழர்களின் காணிகளை சகோதர இனங்கள் கபளீகரம் செய்வது மட்டக்களப்பிலே அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு எல்லைபுற கிராமங்களிலே தமிழ் மக்களை குடியமர்;த்தினால் தமிழர்களின் பூர்வீகக் கிராமங்கள் பாதுகாக்கப்படும். 

தமிழ் தேசிய கூட்மைப்பு கிழக்கு மாகாண சபையிலே மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சினை தன்னகத்தே வைத்துக்கொண்டு இதுவரைக்கும் தமிழ் மக்களை அவர்களுடைய சொந்தக்காணிகளில் கூட குடியேற்றியதாக தெரியவில்லை. ஆனால் மீள்குடியேற்ற இராஜங்க அமைச்சினை சகோதர இனம் வைத்துக்கொண்டு பல இடங்களில் தனது இனத்தினை குடியேற்ற பல வழிகளில் பாடுபட்டு வருகின்றார். உதாரணமாக வாகரையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் இதற்கு சான்ற பகரும். இவ்வாறு நாம் எமது ஆட்சி அதிகார காலத்திடையே நாம் என்ன செய்தோம் என்று வினாவுகின்ற போது பூச்சியமாக இருப்பதற்கு யாரும் இடமளிக்க கூடாது. இதுவேதான் தமிழ் மக்களின் கேள்வியாகவுமுள்ளது. 

கிழக்கு மாகாண சபையிலே மற்றுமொரு பலமிக்க அமைச்சும் தமிழர் கரங்களில் உள்ளது. மக்களை குடியேற்றி அவர்களின் காணிகளில் விவசாயம் செய்வதற்கும், மேட்டுநில பயிர்ச்செய்கை செய்வதற்கும் மானியங்கள் வழங்குவதினூடாக அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தலாம். அதுமட்டுமல்லாமல் கால்நடைகளையும் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தினை மேலும் உயர்வடையச் செய்யலாம். இவற்றை செய்தால் மக்கள் மீண்டும் தங்கள் சொந்தக்காணிகளுக்குள் குடியேறி வாழ்வதுடன் தமிழர்களின் பூர்வீகக் கிராமங்கள் பாதுகாக்கப்படும். 

தமிழர்கள் தமது விவசாய நிலங்களை விட்டுவெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் கிராமப்புறங்களில் தொழிற்பேட்டைகளை அமைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதன் மூலம் இவர்கள் பொருளாதாரத்திற்காக நகர்ப்புறங்களுக்கு நகர்வதை தவிர்க்கலாம். 

கல்வியினை முன்னிறுத்தியும் பல கிராமப்புற மக்கள் தங்கள் சொந்த காணிகளிளை விட்டு நகர்ப்புறங்களுக்கு வெளியேறுகின்றனர். காரணம் மட்டக்ளப்பின் எல்லைப்புறக் கிராமங்களில் பாடசாலைகள் இன்னும் தரமுயர்த்தப்பட வேண்டியுள்ளது. மட்டக்களப்பின் படுவான்கரையில் உள்ள அனைத்துப்பாடசாலைகளும் மாகாணசபைகளுக்குட்பட்டது. இத்தகைய பாடசாலைகளில் முக்கியமான பாடங்களான கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர் இன்மையால் மாணவர்களுடன் பெற்றோர்களும் வெளியேறுவதால் அவர்களுடைய காணி வறிதாக்ககப்படுவதானால் அந்த காணிகளை சிங்களவர்கள் குத்தகைக்கு பெற்று சேனைப்பயிர்ச்செய்கை மற்றும் நெற்பயிர்ச்செய்கை செய்வதனால் காலப்போக்கில் அக்காணிகiளினை அவர்கள் விலைகொடுத்து வாங்கும் நிலை ஏற்படுவதனால் குடியேற்றம் நிகழ்வதற்கு நாங்களே காரணமாகின்றன. 

கிழக்கு மாகாண கல்வி அமைச்சை பெற்றுக்கொண்டதற்கு காரணம் தமிழர்களின் கல்வியினை இதன்மூலம் நிலைபேறடையச் செய்யலாம் என்கின்ற நோக்கமாகும். ஆனால் கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இருபது மாதங்கள் கடந்துள்ள நிலையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்றுக் கல்விக்கோட்டத்தில்  பல பாடசாலைகள் விஞ்ஞான கணித பாட ஆசிரியர்கள் இன்றி இயங்கி வருகின்றது. பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு கணித பாடத்திற்கு 37 ஆசிரியர்களும், விஞ்ஞான பாடத்திற்கு 28 ஆசிரியர்களும், ஆங்கில பாடத்திற்கு 72 ஆசிரியர்களும் தேவையாகவுள்ள நிலையில் மூன்று பாடசாலைகளுக்கு அதிபர் நியமனம் கூட இதுவரைக்கும் வழங்கப்படாமல் இருக்கின்றது. 

அரசியலில் அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகின்றது என்பதை யாராலும் ஊகிக்க முடியாத நிலையில் கிழக்கு மாகாண தமிழர்களுக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பம் ஒரு வரப்பிரசாதம். மீண்டும் இச்சந்தர்ப்பம்  கிடைக்குமா? என்பதை நினைவில் நிறுத்தி, இந்த இரண்டு அமைச்சர்கழூடாகவும் அனைத்து அபிவிருத்திகளையும் ஆட்சிஅதிகாரம் முடிவதற்குள் செய்தால் மாத்திரமே தாங்கள்  கையிலெடுத்துக்கொண்ட அமைச்சுகளுக்கு பெறுமதியாகவிருக்கும். இதுவே கிழக்கு மாகாண தமிழர்களின் அபிலாசையுமாகும். 

(திலக்ஸ் ரெட்ணம்)

SHARE

Author: verified_user

0 Comments: