மாணவர்களிடையே வாசிப்பு அறிவைப் பெருக்கும் முயற்சியாக தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏறாவூர்ப்
பற்றுப் பிரதேச சபை செங்கலடி பொது வாசிகசாலையின் நூலகர் தவராசா சிவராணி தெரிவித்தார்.
தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாளான திங்கட்கிழமை (ஒக்ரோபெர் 31, 2016) கரடியனாறு மகாவித்தியாலய மாணவர்களின் தெரு நாடகத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின.
மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர்-செங்கலடி எல்லையிலிருந்து ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலம் செங்கலடி பொதுச் சந்தையில் முடிவடைந்தது.
தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும், சிறந்த நூலகங்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையினால் நிருவகிக்கப்படும் செங்கலடி பொது வாசிகசாலை, ஆறுமுகத்தான்குடியிருப்பு மற்றும் ஐயங்கேணி நூலகம் ஆகியவை சிறந்த வாசிகசாலைகளாகத் தெரிவு செய்யப்பட்டு பரிசுகளைப் பெற்றன.
வாசிப்புப் பழக்கம் அருகி வருகின்ற இக்காலகட்டத்தில் வாசிப்புப் பழக்கத்தை மாணவர்கள் எவ்வழியிலாவது கைக்கொண்டு ஆக்கபூர்வ அறிவைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதால் இத்தகைய வீதி நாடகமும் விழிப்புணர்வும் செய்யப்பட வேண்டிய தேவை உணரப்பட்டதாகவும் சிவராணி தெரிவித்தார்.
ஊர்வலத்தில் நூலகர்கள், கரடியனாறு மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும்; பிரதேச செயலகம் உள்ளுராட்சி மன்ற அதிகாரிகளும் பங்குபற்றினர்.
0 Comments:
Post a Comment