12 Oct 2016

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமைய ஒருபோதும் இடமளியோம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

SHARE
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு மாற்றீடாக சர்வதேச தரம் வாய்ந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்றினை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் மும்முரம்
காட்டி வருகின்றது. இச்சட்டமூலம் வரைபு தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையவுள்ளதாக சிலதரப்பு எதிர்வு கூறியுள்ளது. அவ்வாறு அது முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையுமாயின் நாங்கள் ஒருபோதும் அதற்கு இடமளிக்க மாட்டோம் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் சிறுபான்மை சமூகத்துக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. இதனால் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற அப்பாவி தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சர்வதேசத்திடம் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளது. அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவிலும் இச்சட்டத்தை நீக்கி புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இவ்விடயம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினாலும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது

சர்வதேசத்தின் ஆலோசனைக்கு அமைவாக உருவாக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எனும் புதிய சட்டமூல வரைபின் பணிகள் தற்போது, பாராளுமன்ற பாதுகாப்பு குழுவினால் தயாரிக்கப்பட்டு வருகின்றதாக இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது

இதில் உள்ளடக்கப்பட்டுள்ள சில அம்சங்கள் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பானதாக அமைந்துள்ளதாகவும், குறிப்பாக முஸ்லிம்களுக்கு அது பெரிதும் பாதிப்பாக அமைந்துள்ளதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர். அண்மையில் நாடாளுமன்றத்திலும் இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டிருந்தது. எம்மிடம்  இதுவரை இந்த சட்ட மூல வரைபின் மாதிரி  வழங்கப்படவில்லை. எனினும், எந்த சட்டமூலமாக இருந்தாலும் அது முஸ்லிம்களுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ பாதிப்பாக அமையுமாயின் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபானது  அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அனுமதியுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அங்கு இது தொடர்பில் விவாதங்கள் நடைபெற்று, தேவை ஏற்படின் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னரே இதனை சட்டமூலமாக நிறைவேற்றப்படும்.

சிறுபான்மை சமூகத்துக்கு பாதிப்பாக இந்த சட்டமூல அமைந்திருப்பின் அல்லது அமையுமாயின் நாங்கள் நாடாளுமன்றத்தில் எமது எதிர்ப்பினை வெளியிடுவோம்


சர்வதேச ரீதியில் தலைதூக்கியுள்ள இணைய குற்றங்களை (உலடிநச உசiஅநள) கட்டுப்படுத்தும் வகையிலும், பொருளதார சவால்களை முறியடிக்கும் வகையிலுமே இந்தச் சட்டமூலம் அமையவுள்ளதாக அரசாங்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தது. எனவே, இவ்வாறான அம்சங்களை நாங்கள் வரவேற்றாலும் அதில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏதேனும் அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்குமாயின் கடும் எதிர்ப்பினை நிச்சயம் வெளியிடுவோம்.- என்றார்.  
SHARE

Author: verified_user

0 Comments: