பாடசாலைகளைப் போன்று அறிவுக் கருவூலமாக நூலகங்கள் திகழ்வதால் மாணவர்கள் நூலகங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபை செங்கலடி பொது வாசிகசாலையின் நூலகர் தவராசா சிவராணி தெரிவித்தார்.
புதன்கிழமை மாலை (ஒக்ரோபெர் 26, 2016) ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளைக் தாண்டித் தெரிவாகிய 35 மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நூலகர் சிவராணி தலைமையில் இடம்பெற்றது.
அங்கு சிறப்புரையாற்றிய சிவராணி மேலும் கூறியதாவது@ மாணவர்கள் அவர்கள் எந்த வகுப்பினராக இருந்தாலும் தமது அறிவுத் தேடலுக்குரிய இடமாக பாடசாலைகளை மாத்திரம் கருதாது பொது நூலகங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பொது நூலகங்கள் என்பதை தமது அறிவு விருத்திக்கும், ஆய்வுக்கும், தேடலுக்கும், ஆக்கபூர்வ சிந்தனைக்குமான இடங்களாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது நூலகங்கள் சிறப்பான வசதிகளோடு நவீன வடிவத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இலத்திரனியல் நூலக அமைப்புக்கும் சில நூலகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
எனவே, வாசிப்புப் பழக்கத்தை மாணவர்கள் எவ்வழியிலாவது கைக்கொள்ள வேண்டும். வாசிப்பே ஒரு மனிதனை பூரணத்துவமுடையவனாக மாற்றும்.
ஆக்கபூர்வ அறிவுத் தேடலின் மூலம்தான் நம் வாழ்வு நலம் பெறும்.” என்றார்.
இந்நிகழ்வில் பிரதேச சபைச் செயலாளர் கே. பேரின்பராசா, நூலக உதவியாளர்களான குமுதா மனோகரன், சண்முகமூர்த்தி ஷரண்யா, சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் இந்துமதி விமல்ராஜ், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எஸ். மகேந்திரன், சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ். பற்குணன் உள்ளிட்டோரும் அரச மற்றும் தனியார் வங்கிகளின் அலுவலர்களும், தனிப்பட்ட பரோபகாரிகளும் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் சான்றிதழும், பரிசுப் பொதியும், சேமிப்புக்கான உண்டியலும் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டார்கள். இதற்கான நிதி அனுசரணையை அரச மற்றும் தனியார் வங்கிகளும் தனிப்பட்ட பரோபகாரிகளும் வழங்கியிருந்தனர்.
0 Comments:
Post a Comment