25 Oct 2016

பொலிஸார் கையகப்படுத்தியிருந்த காணியை உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் உதவிச் சேவை அலுவலகம் பணிப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவின் கீழ்வரும் தியாவட்டவான் நாவலடியில் பொலிஸார் யுத்த காலத்தில் கையகப்படுத்தியிருந்த தனியாருக்குச் சொந்தமான காணியை உடனடியாக
ஒப்படைக்குமாறு பொலிஸ் தலைமையக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் உதவிச் சேவை அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.

இவ்வாறு காணியை மீள ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்ட கடிதத்தை பொலிஸார் காணி உரிமையாளரிடம் கையளித்துள்ளனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தியாவட்டவான் பிரதான வீதியிலுள்ள பியசிறி நந்தபால என்பவருக்குச் சொந்தமான காணியை வாழைச்சேனைப் பொலிஸார் யுத்த காலத்தில் கைப்பற்றியிருந்ததோடு அந்த இடத்தில் பொலிஸ் சோதனைச் சாவடியையும் அமைத்திருந்தனர்.
எனினும், யுத்தம் முடிவடைந்த பின்னர் அந்த இடத்தில் இருந்த பொலிஸ் சோதனைச் சாவடி அகற்றப்பட்டபோதும் தம்வசம் பொலிஸார் கைப்பற்றி வைத்திருந்த காணியை அதன் உரிமையாளரிடம் கைளிப்பதற்கு பொலிஸார் மறுத்து வந்தனர்.

இந்த நிலைமையில் காணி உரிமையாளர் தனது காணியை மீட்டுத் தருமாறு, ஜனாதிபதி, பிரதம மந்திரி, மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபர் ஆகியோருட்பட இன்னும் அக்கறையுள்ள பல தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் பயனாக பலவருடங்கள் கழிந்து விட்ட நிலையில் பொலிஸார் கையகப்படுத்தியிருந்த தனியாருக்குச் சொந்தமான காணியை உடனடியாக அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ் தலைமையக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் உதவிச் சேவை அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.

இந்தக் காணியைப் பாவித்தமைக்காக அதன் உரிமையாளர் வாடகை பெறுவதற்குத் தகுதியுடையராக இருந்தும் வாடகை தனக்குத் தேவையில்லை தனக்கு காணியை மாத்திரம் மீள ஒப்படைத்தால் போதுமானது என்று உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளதாலும் யுத்த காலத்தில் இந்தக் காணியைக் கொடுத்துதவி பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கிமைக்காகவும் அந்தக் கடிதத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்ரோபெர் 15 ஆம் திகதிக்கு முன்னர் காணியை உரிமையாளரிடம் ஒப்படைத்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வாழைச்சேனை பொலிஸார் பொலிஸ் தலைமையகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளபோதும் தற்சமயம் வரை (23.10.2016) பொலிஸார் அந்தக் காணியிலிருந்த உடமைகளை அகற்றிக் கொண்டிருப்பதாக காணி உரிமையாளர் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: