விவசாயிகளுக்கு வாக்களிக்கப்பட்ட எந்தவொரு தேவைகளையும் நிறைவேற்றித் தருவதற்கு அதிகாரிகள் தவறி விட்டதனால் வவுணதீப் பிரதேச பெரும்போகக் கூட்டம்
விவசாயிகளை ஏமாற்றத்தில் தள்ளிவிட்டிருப்பதாக உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத்தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.
திங்கட்கிழமை (ஒக்டோபர் 03, 2016) மட்டக்களப்பு வவுணதீவுபிரதேச பெரும்போக நெற்செய்கைக்கான கூட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் பிரசன்னத்துடன் இடம்பெற்றது.
மாகாண சபை உறுப்பினரான கே. துரைரெட்ணம் மாத்திரம் இந்தக் கூட்டத்திற்கு சமுகமளித்திருந்த அதேவேளை வேறு எந்தவொரு அரசியல்வாதிகளும் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இந்தக் கூட்டம் வவுணதீவுப் பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கி வரும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காணத் தவறி விட்டதால் விவசாயிகள் தமது கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டதாக யோகவேள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மேலும் குறிப்பிட்ட யோகவேள், உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் வலது கரை, இடது கரை மற்றும் ஆற்றுப் பாசனம் ஆகிய நெற் செய்கைக் கண்டங்களில் இந்த ஆண்டு பெரும்போகத்தில் சுமார் 15303 ஏக்கர் நெற்செய்கையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விதைப்பு வேலைகள் இம்மாதம் 10.10.2016 ஆரம்பித்து 05.11.2016 முடிவடைய வேண்டும், ஆரம்ப நீர் விநியோகம் 25.10.2016 என்றும் இறுதி நீர் விநியோகம் 05.02.2017 என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விவசாயிகள் தங்களது செய்கைக்காக காப்புறுதி செய்து கொள்ள வேண்டிய இறுதித் திகதி 10.11.2016 ஆகும், மேலும், சிறப்பான விவசாயச் செய்கைக்கு வழிவிடும் வகையில் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால்நடைகளை விதைப்புத் தொடங்க முன்பாகவே அகற்றிச் சென்றுவிட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவை ஒருபுறமிருக்க இப்பிரதேசத்தில் விளைவிக்கப்படும் நெல்லை நெற்சந்தைப்படுத்தும் சபையினூடாக விற்பனை செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதிருப்பது விவசாயிகளை பெருமளவில் பாதிக்கும் எனத் தெரிவித்த யோகவேள், கடந்த சிறு போகத்தின் போது இப்பகுதியில் விளைவிக்கப்பட்ட நெல்லை நெற் சந்தைப்படுத்தும் சபையினூடாகக் கொள்வனவு செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து தரவில்லை. அதனால், உத்தரவாதமற்ற விலையில் தனியார் வியாபாரிகளுக்கே விற்க வேண்டியிருந்தது என்றும் கூறினார்.
சென்ற 2015 ஆம் ஆண்டின் பெரும்போகத்தில் விளைந்த நெல் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல நெற்களஞ்சியங்களிலும் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அதனால், 2017 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் விளையும் பெரும்போக அறுவடை நெல்லையும் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாட வேண்டிவரும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 10 நெற் களஞ்சியங்களிலும் 2015 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் விளைந்த நெல் குவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறமிருக்க பிரதேச விவசாயத்தைப் பாதிக்கும் மணல் அகழ்வு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
மேய்ச்சல் தரைக்கு இடம் ஒதுக்கப்படவில்லை, உன்னிச்சைக் குளத்தை அண்டியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்களுக்கு குடி தண்ணீரில்லை, காட்டு யானைகளின் தொல்லை தொடர்வது போன்ற பல்வேறு பிரச்சினைகளை பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கி வருகின்றார்கள்.
ஆயினும், ஏழை விவசாயிகளின் இந்தப் பிரச்சினைகளை அரச உயர் மட்ட அதிகாரிகள் சீர் தூக்கிப் பார்ப்பதில்லை எனவும் பிரதேச விசாயிகள் தெரிவிக்கின்றனர் என யோகவேள் கூறினார்.
தாங்கள் முகம் கொடுத்து வரும் எந்தப் பிரச்சினைக்கும் அரச அதிகாரிகள் தீர்வைப் பெற்றுத் தருவதில் அதிக அக்கறை எடுப்பதில்லை எனக் கூறி மட்டக்களப்பு உன்னிச்சைக்குள நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்ரெம்பெர் 27, 2016) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் பெரும்போக பயிர்ச் செய்கைக் கூட்டத்தை அவர்கள் பகிஸ்கரித்திருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment