2 Oct 2016

யுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு வீடுகள் தேவை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

SHARE
யுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு அவர்கள் வாழ்வதற்காக வீடுகள் தேவை இதனை அரசாங்கம் பாரபட்சமின்றி நிறைவேற்ற வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபையில் ஞாயிறன்று உள்ளுராட்சி மன்றம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அலுவலர்களுடன் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்

கிழக்கு மாகாணத்தில் வீடமைப்புக்கான தேவை அதிகமாகவிருந்தும் அதனை மத்திய அரசாங்கம் நிறைவேற்றாத ஒரு குறைபாட்டை நாங்கள் சுட்டிக்காட்டாமல் இருந்துவிட முடியாது.

யுத்தத்திற்குப் பின்னரான மீள் குடியேற்றம் என்பது கூட கிழக்கு மாகாணத்தில் முழுமையாகவும் திருப்தியாகவும்  இடம்பெறவில்லை.

யுத்தத்தின் காரணமாக வலிந்து இடம்பெயரச் செய்யப்பட்ட, இயல்பாக யுத்தத்தின் கொடூரத்திலிருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்த அல்ல வேறு வகைப் பாதிப்புக்களுக்குள்ளான மக்களில் எத்தனையோ பேர் இன்னமும் அதற்கான நிவாரணங்களைப் பெற முடியாத நிலையில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் ஒரு சில குடும்பங்கள் தங்களது சுய முயற்சியில் தங்களை மறுசீரமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

அதேவேளை, யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு மத்திய அரசு மூலமாக ஒரு பாரிய ஒதுக்கீட்டுத் திட்டம் இன்னமும் அமுல்படுத்தப்படாதிருப்பதும் வருத்தமளிக்கிறது.

நாம் எமது மாகாண சபைக்கு ஊடாக ஒவ்வொரு உள்ளுராட்சி மன்ற நிருவாகப் பிரிவிலும் ஒவ்வொரு வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்குரிய நிதி ஒதுக்கீடுகளைப் பெறுவதற்கான வழிவகைகளைச் செய்து வருகின்றோம்.

அது எங்களுக்குக் கை கூடினால் அடுத்த ஆண்டு ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றப் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 50 வீடுகளையாவது நிருமாணித்துக் கொடுத்தால் கிழக்கு மகாணாத்திலுள்ள 45 உள்ளுராட்சி நிருவாகத்தினாலும் மொத்தமாக 2250 வீடுகளை வறிய மக்களுக்காக கட்டிக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.

பின்தங்கிய கிழக்கு மாகாணத்தை முன்னேற்றுவதற்காக நாம் பரிந்துரைக்கும் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் கரிசனையாக உள்ளார்கள். அதிகமான நிதி ஒதுக்கீடுகளைச் செய்து வருகின்றார்கள்.

மத்திய பாரிய வீடமைப்புத் திட்டம் அமுலாகிறது. கிழக்கு மாகாணத்துக்கு உரிய விகிதாசாரத்தின்படி வழங்கப்டுகின்றதா என்’பது கேள்விக்குறியாகவுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாகவும் பாரிய வீட்டுத் திட்டங்களை அமுல்படுத்துகிறார்கள். மத்திய அரசிலே நிதி ஒதுக்கீடுகளை குவித்து வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை. 2017 இலே அரசினுடைய கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டு விகிதாசாரப்படி வீடமைப்பும் இன்னபிற அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் அவாக் கொள்கிஜன்றோம். இது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டால்தான் நல்லிணக்கம் என்பது சாத்தியமாகும்”என்றார். 


SHARE

Author: verified_user

0 Comments: