22 Sept 2016

ஏறாவூர் படுகொலை ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்து மகஜர் அனுப்பி வைப்பு

SHARE
ஏறாவூர் படுகொலை சம்பந்தமாக ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வியாழக்கிழமை மகஜரொன்று அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.

அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது@ எமது நாட்டில் இடம்பெறும் மனிதப் படுகொலைகள், பெண்களுக்கெதிரான வன்முறைகளை உள்ளிட்ட போதை வஸ்துப் பாவினையும் முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,

இத்தகைய குற்றச் செயல்களின் தேசிய மற்றும் சர்வதேச வலையமைப்புக்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்,

இது போன்ற மனித குலத்துக்கெதிரான கொடூரச் செயல்கள் இனிமேலும் இடம்பெறாது பாதுகாக்க வேண்டும்,

குற்றவாளிகளுக்கு நீதித்துறை மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்,

எந்தவொரு குற்றச் செயலுக்கும் இன மத மொழி பிரதேச, கட்சி வேறுபாடுகளற்ற பக்க சார்பற்ற நீதி விசாரணை இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்,

நேரடியாகத் தெரியும் குற்றவாளிகளுக்காக இன மத வேறுபாடின்றி சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

ஏறாவூரில் கடந்த 11.09.2019 அப்பாவிகளான தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அச்சம்பவத்துக்கு நீதி கோரியும் வியாழக்கிழமை  நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஏறாவூரில் இடம்பெற்ற கவன ஈர்ப்புப் போராட்டத்திலும் இவ்வாறான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்;டதாக அவர் தெரிவித்தார்.

ஏறாவூர் நகரம்  முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது உஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெஸீரா பானு மாஹிரும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள்  கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.09.2016) மீட்கப்பட்டன.

இக்கொலை தொடர்பான சந்தேக நபர்களில் முக்கிய சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் இருவர் இந்தவார ஆரம்பத்தில் ஏறாவூர் நகரில் கைதாகினர்.
புலனாய்வுப் பொலிஸார் நடத்தி வந்த தொடர் விசாரணைகளில் சம்பவத்தின் மிக முக்கிய சூத்திரதாரிகள் என சந்தேகிக்கப்படும் அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50), இஸ்மாயில்  சப்ரின் (வயது 30) ஆகியோர் ஏறாவூர்ப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: