22 Sept 2016

நீதி கோரி நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு பூரண கடையடைப்பால் ஊர் ஸ்தம்பித்தது.

SHARE
ஏறாவூரில் கடந்த 11.09.2019 அப்பாவிகளான தாயும் மகளும் படுகொலை
செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அச்சம்பவத்துக்கு நீதி கோரியும் வியாழக்கிழமை  நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பூரண கடையடைப்பால் ஊர் ஸ்தம்பித்ததுப் போனது. எனினும், போக்குவரத்து மற்றும் அரச காரியாலயங்கள் வழமை போன்று இயங்கின.

“நீதித்துறையே! கொலையாளிகளுக்கு கூடிய தண்டனை கொடு, பிணை வழங்க வேண்டாம். சட்டத்தரணிகளே! குற்றவாளிகளுக்காக குரல் கொடுக்க வேண்டாம், அதிகாரிகளே! அழுத்தங்களுக்கும் பணப்பரிமாற்றங்களுக்கும் அடிபணிய வேண்டாம், அரசியல்வாதிகளே! மௌனம் கலை, அநீதிக்கு எதிராகக் குரல் கொடு, அரசே! புலனாய்வுப் பொலிஸாரிடமே விசாரணை செய்யும் பொறுப்பை ஒப்படை, துணிந்து செயற்பட்ட துப்பறியும் பொலிஸாரைப் பாராட்டுகின்றோம். நல்லாட்சியிலும் நல்லவர்கள் வாழ முடியாதா? என்றவாறான பல்வேறு கோஷங்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு பொதுமக்கள் வீதியில் இறங்கி மனித சங்கிலிப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் சுமார் 56 நிறுவனங்கள் இந்த கண்டன, மற்றும் நீதி கோரிய கவன ஈர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.

ஏறாவூர் நகரம்  முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது உஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெஸீரா பானு மாஹிரும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள்  கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.09.2016) மீட்கப்பட்டன.

இக்கொலை தொடர்பான சந்தேக நபர்களில் முக்கிய சூத்திரதாரி கைது செய்யப்பட்டிருக்கின்ற போதும்  பல மறைமுகமான பணப்பரிமாற்றங்கள், அரசியல் அழுத்தங்கள் காரணமாக நீதி விசாரணையில் தலையீடுகள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே தாங்கள் இத்தகைய மாபெரும் மக்கள் எதிர்ப்பு ஹர்த்தால் மற்றும் கடையடைப்புக்கும் தள்ளப்பட்டிருந்ததாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் சூத்திரதாரி என்று நம்பப்படும் சந்தேக நபர் பணப்பரிமாற்றங்களையும், அழுத்தங்களையும் பல்வேறு தரப்புகளினூடாகச் செய்திருப்பது பற்றிப் பரவலாகப் பேசப்படுவதால் இச்சம்பவம் குறித்தும் கொலையாளிகள் தப்பி விடக் கூடாது, நீதித்துறையில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பொய்த்துவிடக் கூடாது என்பதாலும் இது குறித்து ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு தாங்கள் மகஜர்களை அனுப்பியுள்ளதாக ஷயீட் மேலும் கூறினார்.
இதேவேளை இந்த ஹர்த்தால் கடையடைப்பு எந்த விதமான வன்முறைகளும் அற்ற விதத்தில் மனித சங்கிலிப் போராட்டமாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

வியாழக்கிழமை ஹர்த்தால், கடையடைப்பு. நீதிகோரிய மனித சங்கிலிப் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட  அதேவேளை ஊர் மக்கள் விஷேட நோன்பு நோற்று பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் இந்த கவன ஈர்ப்பு மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் திங்கள் மாலை மற்றும் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்ட, படுகொலைச் சம்பவத்தின் மிக முக்கிய சூத்திரதாரிகள் என சந்தேகிக்கப்படும் எம்.பிலால், வெள்ளத்தம்பி.முகமது.சப்ரின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: