மூன்று தசாப்தகால கோர யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவுகின்ற சூழ்நிலையிலும், இடம்பெயர்ந்து வாழும் எமது மக்களில் அதிகமானோர்
இன்னமும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாமல் அவதிப்படுவது தியாகத் திருநாளான இந்த 'ஈதுல் அழ்ஹா' பெருநாள் தினத்தில் எங்கள் கவனத்தை ஈர்;க்கின்றது.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவரது பெருநாள் செய்தியில் காணப்படுவதாவது,
இஸ்லாத்தின் இறுதிக்கடமையான புனித ஹஜ்ஜை நிறைவேற்றிய திருப்தியில் யாத்திரிகர்கள்
'ஈதுல் அழ்ஹா' தியாகத்திருநாளை கொண்டாடும் இவ் வேளையில், உலகளாவிய முஸ்லிம் உம்மத்துடன் ஒன்றிணைந்து இலங்கை முஸ்லிம்களாகிய நாங்களும் இந்தத் திருநாளைச் சந்திக்கின்றோம்.
நபி இப்ராஹிம் (அலை), நபி இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தின் சிறப்பை வலியுறுத்தும்
'ஈதுல் அழ்ஹா' பெருநாளை வழமை போன்று பல்வேறு இன்னல்களுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் முஸ்லிம்கள் இந்த நாளில் கொண்டாடுகின்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில், முஸ்லிம்களில் அநேகர் பிறந்து, வளர்ந்த நாடுகளிலேயே அநாதைகளாக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, வேறு நாடுகளில் சென்று தஞ்சமடையும் துர்ப்பாக்கிய நிலைமைக்கும் உள்ளாகியிருப்பதை இந்த வேளையில் நாம் மறந்து விட முடியாது.
நமது தாய் நாடான இலங்கையிலும் கூட, மூன்று தசாப்தகால கோர யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவுகின்ற சூழ்நிலையிலும்,
இடம்பெயர்ந்து வாழும் எமது மக்களில் அதிகமானோர் இன்னமும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாமல் அவதிப்படுவது இந்த பெருநாள் தினத்தில் எங்கள் கவனத்தை ஈர்;க்கின்றது.
பொதுவாக சிறுபான்மை மக்களுக்கும், குறிப்பாக முஸ்லிம்களுக்கும் எதிராக நன்கு திட்டமிட்ட வன்செயல்களை கட்டவிழ்த்து விட்டிருந்த முன்னைய ஆட்சியாளர்களின் அட்டகாசம் அகன்று, தேசிய அரசாங்கம் உருவாகி, நல்லாட்சி மலர்ந்துள்ள நிலைமையில் நாட்டில் வாழும் சகல இன மக்கள் மத்தியிலும் புரிந்துணர்வினூடான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவது இந்தச் சந்தர்ப்பத்தில் பெரிதும் நம்பிக்கையூட்டுவதாகவுள்ளது.
தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற முறையிலும் 'ஈதுல் அழ்ஹா' தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரவித்துக் கொள்கின்றேன்.
ஈத் முபாரக்!
ரவூப் ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்.
0 Comments:
Post a Comment