கொலையாளிகளைத் தப்ப வைக்க எவர் முயற்சித்தாலும் எதிர்த்து நின்று
இறுதிவரைப் போராடுவேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் சூளுரைத்தார்.
ஏறாவூரில் இடம்பெற்ற தாய் மகள் ஆகிய இருவரினதும் இரட்டைப் படுகொலைக்கு நீதி கோரி வியாழக்கிழமை (செப்ரெம்பெர் 23, 2016) ஏறாவூர் நகரில் நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் மக்களோடு மக்களாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு முதலமைச்சர் கண்கலங்கினார்.
வியாழக்கிழமை காலை ஏறாவூர் நகரில் இடம்பெற்ற மனித சங்கிலி கவன ஈரப்புப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றினர். கவன ஈர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற போது கடைகள் பூட்டப்பட்டிருந்ததால் நகரம் வெறிச்சோடியிருந்தது.
போராட்டக்காரர்களுடன் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றினார் முதலமைச்சர்@ புனிதமான அறபா நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு தினங்களையும் கரிநாளாக்கிய இந்தப் படுகொலை வரலாற்றில் மன்னிக்கப்படவும் மறக்கப்படவும் முடியாதது.
குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
குற்றவாளிகள் விடயத்தில் எந்தவிதமான செல்வாக்குகளையோ அல்லது மறைமுகமான சன்மானங்களையோ அதிகாரிகள் பெறுவார்களாக இருந்தால் அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நாங்கள் ஒன்றிணைந்து இறுதி வரைப் போராடுவோம்.
எந்த விதமான பணப்பரிமாற்றஙங்களோ அரசியல் செல்வாக்குகளோ அதிகார அழுத்தங்களோ இன்றி இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் அமுல்படுத்தப்படுத்தப்பட வேண்டிய தேவையை மக்கள் இப்பொழுது கோரி நிற்கின்றார்கள். அதனையே நாமும் வலியுறுத்துகின்றோம்.
போதைப் பொருள் விற்பனை வலைப்பின்னல் இப்பொழுது வியாபித்து நிற்கின்றது. அதனையும் இந்த சமூகம் அடியோடு ஒழிக்க வேண்டும். அதிகாரிகள் இந்தப் போதைப் பொருள் விற்பனைக்குத் துணைபோவார்களாக இருந்தால் அவர்களை அடையாளம் காட்டவும் பொதுமக்கள் தயங்கக் கூடாது.” என்றார்.
0 Comments:
Post a Comment