7 Sept 2016

மலேசியாவில் இலங்கை தூதுவர் மீது மேற்கொண்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றேன்

SHARE
மலேசியாவில் இலங்கை தூதுவர் மீது மேற்கொண்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை
தமிழ் இளைஞர்கள் கைவிடவேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். 

நேற்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பட்டிருப்பில் அமைக்கப்பட்டுள்ள நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நன்னடத்தை அலுவலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வடக்கு கிழக்கிலே குறிப்பாக போராட்டம் நிறைவடைந்ததற்குப் பின்னர் எங்களது இளைஞர்களின் நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். வடகிழக்கிலே போராட்டத்தினால் தமது பெற்றோர், பாதுகாவலர்களை இழந்த சிறுவர்கள் பலர் இருக்கின்றார்கள். 

சிறுவர் பாதுகாப்பு என்பதற்கு மேலாக சிறுவர் நன்னடத்தை என்கின்ற விடயத்தை முதலில் கவனத்திற்கொண்டு எமது எதிர்கால சந்ததியை நன்றாக வளர்த்தெடுக்கவேண்டிய தேவைப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.  சிறுவர்களாக நாம் இருக்கின்றபோது பழகுகின்ற பழக்கவழக்கங்களே எதிர்காலத்தில் எமது நடவடிக்கைகளுக்கு காரணமாக அமையும். கடந்த 35வருடங்களாக எமது பகுதிகளில் நடைபெற்ற யுத்தம் காரணமாக நாங்கள் பெறுமதியான உயிர்கள் உட்பட பலவற்றை இழந்திருக்கின்றோம்.

எமது எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தி நல்ல சமுதாயமாக உருவாக்க வேண்டும். கடந்தவாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவுக்குச் சென்றிருந்தவேளை அங்கு அவருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களும் மலேசிய தமிழர்களும் இணைந்து விமான நிலையத்திலிருந்து அவர் தங்குமிடம் வரை சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார்கள். 

அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் அந்நாட்டின் தூதுவராக இருந்த எமது சகோதர இனமான முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த தூதுவர்  ஒருவரை தாக்கியதை வீடியோ காட்சிகள் மூலம் பார்த்தோம். இது மிகவும் கவலைக்குரிய இருந்தது. அவரை தாக்கியதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். எமது எதிர்கால சந்ததியை காப்பாற்றவேண்டுமாக இருந்தால் சிறுவர் பாதுகாப்பு நன்னடத்தை திணைக்களம் சிறப்பான சேவையினை எமது பிரதேசங்களில் மேற்கொள்ள வேண்டும். 

அவர்களை சிறந்த சமூகமாக உருவாக்கித் தரவேண்டும். நாங்கள் அரசியலில் இருக்கும்வரை உங்களுக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்வோம்'; என்றார். 
SHARE

Author: verified_user

0 Comments: